ராமேஸ்வரம் கோயிலில் எதிரிகளின் கோபம் தணிக்க சசிகலா சிறப்பு பூஜை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தனியார் விடுதியில் தங்கினார். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலுக்கு கட்சி பிரமுகர்கள் 200 பேருடன் வந்தார். அங்கு சுவாமி சன்னதி அருகிலுள்ள விஸ்வநாத சன்னதி முன்பு கங்கை நீர் அடங்கிய புனித நீர் கலசம் வைத்து நடத்தப்பட்ட கும்ப பூஜையில் பங்கேற்றார். 30 புரோகிதர்கள் வேதபாராயணம் முழங்க, நடந்த ருத்ரபாராயண ஜபம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற சசிகலா புனிதநீர் அடங்கிய கலசத்துடன் ராமநாதசுவாமி சன்னதிக்கு சென்றார்.

அங்கு சுவாமி தரிசனம் செய்தவர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபட்டார். காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறினார். ருத்ரபாராயண ஜப பூஜையில் பங்கேற்ற புரோகிதர்களிடம் கேட்டபோது, ‘‘எதிரிகளின் கோபத்தை தணித்து அவர்களை சாந்தமடைய செய்வதற்காக நடத்தப்படும் பூஜையே ருத்ரபாராயண ஜப பூஜை’’ என்றனர். கோவில்பட்டியில்: கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனநாத சுவாமி கோயிலுக்கு சசிகலா நேற்று காலை காரில் சென்று தரிசனம் செய்தார். பின்னர் பூவனநாத சுவாமி சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் அரை மணி நேரத்துக்குப்பின்  வெளியே வந்து காரில் மதுரை புறப்பட்டு சென்றார். அவருடன் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.

Related Stories: