நில பிரச்னை குறித்து பொது இடத்தில் விவாதிக்க சைதை துரைசாமிக்கு சவால்: மா.சுப்பிரமணியன் வக்கீல் நோட்டீஸ்

சென்னை: நில பிரச்னை தொடர்பாக நேருக்கு நேர் விவாதிக்க சைதை துரைசாமியை, மா.சுப்பிரமணியன் அழைத்து பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்போட்டை தொகுதி எம்எல்ஏவும், தற்போதை சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளருமான மா.சுப்பிரமணியன் மீது பார்த்திபன் என்பவர் கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனி நிலம் தொடர்பாக புகார் தெரிவித்தார். இந்தநிலையில், அந்த புகாரை பற்றி தான் தேர்தல் பிரசாரத்தில் பேசவுள்ளதாகவும், மக்களிடம் பரப்புரை செய்யவுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும்படி, சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்துக்கு கடந்த 27ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், மா.சுப்பிரமணியன் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சைதை துரைசாமியின் வழக்கறிஞருக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், உங்களது கட்சிக்காரரான சைதை துரைசாமி, கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் இருந்து 5 வருடமாக பார்த்திபன் என்பவரை இயக்கி வருகிறார். அவர், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதனைதொடர்ந்து எனது கட்சிக்காரர் மா.சுப்பிரமணியன் மீது நில மோசடி புகார் கூறினார்.  இந்த தேர்தலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது சைதை துரைசாமி அந்த பழைய பிரச்னையான நில விவகாரம் தொடர்பாக பேசுகிறார். எனவே உங்கள் கட்சிக்காரர் விரும்பியபடி புகார் கூறும் நிலம் தொடர்பாக உரிய ஆவணங்களை வைத்து பிரசாரம் செய்யலாம்.

ஆனால், இந்த புகார் தொடர்பாக உங்கள் கட்சிக்காரரான சைதை துரைசாமியை, எனது கட்சிக்காரர் மா.சுப்பிரமணியத்திடம் மக்கள் மற்றும் ஊடகம் மத்தியில் பொதுவெளியில் வரும் 4ம் தேதிக்குள் நேருக்கு நேர் தனியே விவாதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவாதம் குறித்து குறிப்பிட்ட காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும், என்று சைதை துரைசாமிக்கு அனுப்பிய நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: