அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை..!

தருமபுரி: அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனைகளை நடத்தி பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்னகிரி ஆகிய அனைத்து இடங்களிலும் அவரின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனையானது தீவிரமாக நடைபெற்றது. முதல் நாள் சோதனையிலேயே கணக்கில் வராத ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை விரிவுப்படுத்தியதை அடுத்து மேலும் ஒரு 3 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் முடிவடைந்த இந்த வருமான வரித்துறை சோதனையில் மொத்தமாக 11 கோடி ரூபாய் அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.  

பறிமுதல் செய்யப்பட்ட 11 கோடி ரூபாய் குறித்து எந்த கணக்கும் அவர்களிடம் இல்லாத காரணத்தால் அடுத்தகட்டமாக சம்மன் அளிக்கப்பட்டு இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அதில் கணக்கில் வராத வருமானம் பல இருப்பதாகவும் அவை கணக்கிடும் பணியில் வருமானவரித்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Related Stories: