திருத்தணி முருகன் கோயிலில் குளத்தில் மூழ்கி 2 வாலிபர் பலி

சென்னை: வில்லிவாக்கம் பாரதி தெருவை சேர்ந்த நெகேமியா(19). தனியார் கம்பெனியில் பேக்கேஜ் பணி செய்கிறார். கிஷோர்(27) ரேடியோ வாடைக்கு தரும் பணி செய்து வருகிறார். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 3 நபர்கள் சேர்ந்து திருத்தணி மலைக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருத்தணி சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று தரிசனம் செய்துவிட்டு மலைக்கோயிலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மலைக்கோயில் அருகே உள்ள படசெட்டி குளத்தில் நெகேமியா குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கூச்சலிட்டார். இதனை கண்டு அவரை காப்பாற்ற கிஷோர் குளத்தில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியததால் ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கினர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், திருத்தணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரப்பர் படகு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் குளத்தில் இருவரின் சடலத்தை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

* சுற்றுச்சுவர் இல்லை

பக்தர்கள் கூறுகையில், “கோயில் நிர்வாகம் அந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளது. ஆனால் ஒரு சில பகுதிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால் அந்த வழியாக வந்த இருவரும் குளத்தில் இறங்கி குளிக்க முயன்றபோது தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும்,” என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: