நெல்லூர் அருகே கோர விபத்து சென்னை பெரம்பூரை சேர்ந்த 8 பேர் பலி: ஆன்மிக சுற்றுலா சென்றபோது பரிதாபம்

சென்னை: ஆந்திராவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நின்று இருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில், சென்னை பெரம்பூரை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 8 பேர் ஆபத்தான நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் அகரம் ஜி.கே.எம்.காலனி 1வது தெருவை ேசர்ந்தவர் நந்தகுமார்(67). இவர் ஒவ்வொரு வருடமும் பொதுமக்களை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நந்தகுமார் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு புகழ்பெற்ற கோயில்களுக்கு அழைத்து சென்றார். இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு அவரது மனைவி பத்மினி, பெரம்பூர் அகரத்தை சேர்ந்த மணிரத்தினம் (27), பெரம்பூர் வாசுதேவன் தெருவை சேர்ந்த சாய்கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சுஜாதா(48), பெரம்பூர் வஜ்ரவேல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி, பெரம்பூர் லோகோ 2வது ெதருவை சேர்ந்த வசந்த் ஆஷா(60), பெரம்பூர் அகரத்தை ேசர்ந்த தமரமடுகு ரேவதி (60) உட்பட 15 பேர் சென்றார்.

சென்னையில் இருந்து ரயில் மூலம் ஆந்திரா நெல்லூருக்கு சென்ற இவர்கள், நெல்லூரில் டிராவல்ஸ் வேன் ஒன்று வாடகைக்கு எடுத்து கோயில்களை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு நெல்லூரில் இருந்து டிராவல்ஸ் வேன் மூலம் கர்னூல் மாவட்டம் சைலம் மல்லிகார்ஜூன சுவாமியை வழிபாடு செய்ய சென்றனர். வேனை நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லகுரெட்டி ஓட்டினார். நேற்று அதிகாலை நெல்லூர் மாவட்டம் புச்சி ரெட்டிபாளையம் அருகே உள்ள தாமரமடுகு பகுதியில் உள்ள மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த நந்தகுமார், அவரது மனைவி பத்மினி, ஜெகதீஸ், சுஜாதா, சகுந்தலாதேவி, ஆஷா, தமரமடுகு ரேவதி மற்றும் வேன் டிரைவர் நல்லகுரெட்டி என 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், வேனில் இருந்து 8 பேர் படுகாயங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் சிதறியபடி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து ஆந்திரா நெல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த நெல்லூர் போலீசார் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 5 பெண்கள் உட்பட 8 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சாலையோரம் லாரியை நிறுத்திய  லாரி டிரைவரை தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் 3 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆன்மிக சுற்றுலா சென்ற 8 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: