அறிகுறிகள் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை; பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வரை குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 500 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த 10 நாட்களாக 1,500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று 2,089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிகளவில் கொரோனா தொற்று பரவுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதித்தவர்கள் நேரடியாக மருத்துவமனையில் வந்து சேர்வதால் தரம் பிரிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. மதம், கலாச்சாரம், அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.81 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதால் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து சுகாதார மையங்களிலும் இரவு 10 மணி வரை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கைகள் உள்ளன எனவும் கூறினார்.

Related Stories: