பாஜக எம்.எல்.ஏ மீது விவசாயிகள் சரமாரி தாக்குதல்: எம்எல்ஏ மீதான தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மீது போராட்ட குழுவை சேர்ந்த விவசாயிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பங்கெடுத்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களால் பஞ்சாப் மாநிலத்தில் மத்திய பாஜக அரசு மீது கடும் எதிர்ப்பலை வீசுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் அபோஹர் பேரவை தொகுதி உறுப்பினரான பாஜகவை சேர்ந்த அருண் நாரங் உள்ளூர் தலைவர்களுடன் மலெவுட் நகரில் செய்தியாளர் சந்திப்புக்கு சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்து அவரை முற்றுகையிட்ட விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து எம்.எல்.ஏ. அருண் நாரங்கை முற்றுகையிட்ட விவசாயிகள் அவர் மீது கருப்பு மையை ஊற்றி, அவரது சட்டையை கிழித்தெறிந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீசார் அருண் நாரங்கை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து விவசாயிகளை கட்டுப்படுத்திய போலீசார் எம்.எல்.ஏ.அருண் நாரங்கை அங்கிருந்து அழைத்து சென்றனர். இது தொடர்பாக மலெவுட் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ.மீதான இந்த தாக்குதலுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ. அருண் நாரங்கை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இதேபோல் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு இது போன்ற செயல்களை தாங்கள் ஊக்குவிப்பது இல்லை என்று கூறியுள்ளது.

Related Stories: