வைகை ஆற்றுக்குள் விடப்படும் சாக்கடையால் குடிநீருக்கு ஆபத்து-பாதாள சாக்கடை கொண்டுவரப்படுமா?

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றுக்குள் விடப்படும் கழிவுநீரால் மானாமதுரையில் குடிநீர் ஊற்றுக்கள் மாசடைந்து வருகின்றன. ஆற்றுக்குள் வரும் கழிவுநீரை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் உள்ள 18 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் வைகை ஆறு மானாமதுரையில் ஊருக்கு நடுவே செல்கிறது.

வைகை ஆறு 1980ம் ஆண்டுகளில் சுத்தமாக வெள்ளை மணல் நிரம்பி மெரினா கடற்கரையை போல மாலைநேர பொழுதுபோக்கும் இடமாக இருந்தது.  இதுதவிர ஆற்றின் இருகரைகளிலும் புகழ்பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலும், வீரஅழகர் கோவிலும் இருப்பதால் சித்திரை, ஆடி மாதங்களில் பத்து நாட்களும் திருவிழா நடக்கும்.

 சித்திரை திருவிழாவின் போது இந்த ஆற்றில் தான் அழகர் சுவாமி இறங்குவார். கடந்த .30 வருடங்களுக்கு முன்பெல்லாம் திருவிழாவின் போது நிகழ்ச்சிகளை மக்கள் ஆற்றுக்குள் உள்ள மணலில் உட்கார்ந்து தான் பார்த்துச் செல்லும் அளவிற்கு மணல் கிடந்தது. நகரில் சேகரமாகும் சாக்கடை மற்றும் குப்பைகளை ஆற்றுக்குள் விடுவதால் தற்போது வைகையாற்றுக்குள் எங்கு பார்த்தாலும் கருவேலமரங்களும், முள்செடிகளும், நாணல் செடிகளும் வளர்ந்து மணலே இல்லாமல் உள்ளது. மேலும் சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படுவதோடு பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கடந்த 21017ம் ஆண்டு இங்கு தாசில்தாராக இருந்த சிவக்குமாரி மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர். மேலும் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் ஆரம்பித்தனர்.

அதன்பின் அப்பணிகள் பாதியில் நின்ற நிலையில் கழிவுநீர் ஆற்றுக்குள் தேங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. கழிவுநீர் தேங்குவது தொடர்ந்தால் அருகிலுள்ள ராஜகம்பீரம் குடிநீர் உறை கிணற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மானாமதுரை முழுவதும் சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் நோய்கள் ஏற்படுவதுடன் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணறுகளும் அழியும். எனவே நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அகற்றி அதனை சுத்தம் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் பிரபு, சங்கர் கூறுகையில், மானாமதுரை ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சுவையானதாக இருக்கும். தற்போது அதன் சுவை மாறத்தொடங்கியுள்ளது. இது தவிர குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடத் துவங்கியுள்ளது. எனவே சாக்கடை நீரை அகற்றி இனிமேல் சாக்கடை நீரை ஊருக்கு வெளிப்புறத்திற்கு கொண்டு சென்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விட வேண்டும். சித்திரை திருவிழா துவங்குவதற்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் ஆற்றில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கருவேல மரங்கள் வளரத் துவங்கியுள்ளது. எனவே அதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories: