ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிகள் பரப்பியதோடு 6 மாதமாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை பணி-வாகனஓட்டிகள், கிராமத்தினர் அவதி

*இது உங்க ஏரியா

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மூர்த்தியான் 3 சென்ட் கிராமம் என்ற இடத்தில் கடந்த 6 மாதங்களாக பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்ட தார் சாலையால் வாகனஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து இக்கிராம மக்கள் கூறுகையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பாளையம் அருகே மூர்த்தியான 3 சென்ட் கிராமத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் சாலை செப்பனிடும் பணிதுவங்கியது.

இந்த 3 சென்ட் கிராமம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது 360 பேருக்கு பட்டா வழங்கினார். தற்போது இந்த கிராமத்தில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 26 தெருக்கள் உள்ளன. இவற்றில் 15 தெருக்களுக்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தெருக்கள் முழுவதும் ஜல்லி கொட்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் கிராமத்தில் வசிப்பவர்கள் சாலையை கடந்து செல்ல முடிவதில்லை. மேலும் சைக்கிள், டூவீலர்களில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு செல்லும்போது தவறி விழுந்து குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் செல்பவர்கள் பலர் வெளியில் செல்லும்போது தவறி விழுந்து காயமுற்றுள்ளனர். ஆகையினால் சாலையை விரைந்து சீரமைத்து தரமாகவும், சீரமைக்க வேண்டும் எனவும் மீதமுள்ள தெருக்களுக்கும் சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: