முன்னேறிய வகுப்பினரை 2ஏ பிரிவில் சேர்க்க எதிர்ப்பு: 28ம் தேதி போராட்டத்தில் சித்தராமையா பங்கேற்பு

கோலார்: போராட்டம் குறித்து கோலார் நகரில் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.இராமசந்திரப்பா, மைசூரு மினரல்ஸ் முன்னாள் தலைவர் கிஷோர்குமார், கர்நாடக மாநில குருபர் சங்க தலைவர் சோமண்ணா, கோலார் மாவட்ட குருபர் சங்க தலைவர் முனியப்பா உள்பட பலர் கூட்டாக செய்தி யாளர்களிடம் கூறுகையில்: மாநிலத்தில் லிங்காயத்து, லிங்காயத்து பஞ்சமசாலி உள்பட பல வகுப்பினர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறையிலும் நல்ல நிலையில் உள்ளனர். அவ்வகுப்பினர் தற்போது 3ஏ கேட்டகிரியில் உள்ளனர். அதை பிற்படுத்தப்பட்டோர் 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மடாதிபதி ஒருவர் தலைமையில் பாதயாத்திரை, தர்ணா என பல்ேவறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்கள் போராட்டத்திற்கு பணிந்துள்ள மாநில அரசு 6 மாதங்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளது.

மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் 2ஏ பிரிவில் 100க்கும் மேற்பட்ட வகுப்பினர் உள்ளனர். அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியாத நிலையில், முன்னேறிய வகுப்பான லிங்காயத்து பஞ்சமசாலியை சேர்ந்தால், இடஒதுக்கீட்டில் கிடைத்து வரும் அனைத்து பயன்களும் அவர்கள் அனுபவித்து, உண்மையான பயனாளிகள் வஞ்சிக்கப்படுவார்கள். அரசு இதற்கு வாய்பு கொடுக்ககூடாது என்று வலியுறுத்தி கோலார் நகரில் உள்ள மகாத்மாகாந்தி சிலை அருகில் 28ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் மேலவை தலைவர் வி.ஆர்.சுதர்சன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories: