2011-16ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் மின் வாரியத்தில் 1,026 கோடி ஊழல்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை:  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் கடந்த 2011 முதல் 2016 வரை ஆட்சியில், மின்சார வாரியத்தில் ஊழல் நடந்து இருக்கிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிக்காக கான்ட்ராக்டர் கேட்டது 236.57 கோடி தான். ஆனால், கான்ட்ராக்டருக்கு 1,267 கோடியே 49 லட்சம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. கான்ட்ராக்டர் கேட்பதைவிட அதிகமாக கொடுத்து இருக்கீங்களே, பணம் எங்கே போனது என்று ஆடிட்டிங்கில் கேட்கிறார்கள். கேட்டதற்கு மின்வாரிய சேர்மன், ‘இதை நீங்கள் கேட்கக்கூடாது. கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்க இதைவிட்டு விட்டோம்’ என்று கூறி உள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிஏஜி கூறியுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.12,058 கொடுக்கப்பட்டுள்ளது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. 1,026 கோடி ரூபாய் கூடுதலாக பணம் பெற்று இருக்கிறார்கள் என்று ஆடிட்டிங்கில் ஆட்சேபனை செய்து இருக்கிறார்கள்.

இந்த  ஆடிட் ஆட்சேபனை  சிஏஜி செய்த நேரத்தில் இதை டிராப் பண்ணுங்க என்று மின்வாரியத்தின் சேர்மன் கேட்டதற்கு இணங்க அவர்கள் மறு விசாரணைக்கு கேட்டு இருக்கிறார்கள். இந்த அறிக்கை 2020ம் ஆண்டு பிப்ரவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சிஏஜி என்பது தமிழ்நாடு அல்ல. மத்திய அரசின் கையில் உள்ளது. மத்திய அரசு 2020லிருந்து 2021 வரை இவற்றை கவனிக்கவில்லை என்றால் இவர்களுக்கு என்ன கூட்டு இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? இல்லையா?. இரண்டு அரசுகளும் சேர்ந்து மிகப்பெரிய ஊழலை மின்வாரியத்தில் குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் செய்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. சிஏஜி 9.2.2020 அன்று அறிக்கை தாக்கல் பண்ணியிருக்கிறார்கள். இதை சட்டசபையில் கூட இவர்கள் வைக்கவில்லை. கருத்து கணிப்பு எல்லாம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்பதற்கு பிறகு, இது எல்லாம் ஒன்று ஒன்றாக வந்து ெகாண்டு இருக்கிறது. இதை மக்களிடத்தில் சொல்வோம். சட்டசபை தேர்தலுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் நிறைய நாட்கள் இருக்கிறது. நாங்கள்  விழிப்புணர்வுடன் இருக்கிறோம். தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கும்  என்று நம்பிக்கை இருக்கிறது என்றார். உடன் திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ இருந்தார்.

Related Stories: