விவசாய கடன் ரத்து செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றுவிட்டதா? : ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: விவசாய கடன் ரத்து செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றுவிட்டதா என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன் ரத்து என்று அறிவிக்கிறார். 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று பெருமைப்படுகிறார். இந்த திட்டத்துக்கு துணை முதல்-அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்லுவார்களா? பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே. அதை ஏன் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்கிறார்கள்? இது முதல் தவணையாம். அடுத்த தவணை எப்பொழுது?

அடுத்த தவணையை அறிவிப்பதற்கு தாங்கள் இருக்கமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அரசுக்குத் தெரியும். அது ஒரு புறம் இருக்க, விவசாயக் கடன் ரத்து என்பதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு பெற்றுவிட்டார்களா? எப்பொழுது பெற்றார்கள்? இந்த கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்லவேண்டும் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: