பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆத்யநாத் தமிழகத்திற்கு படையெடுப்பு : எல்.முருகன் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

சென்னை : மத்திய உள்துறை அமித்ஷா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக 23 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் தமாகா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு இறுதியானதற்கு முன்னர் பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது.பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பாஜக கடைசியாக மார்ச் 5ம் தேதி நள்ளிரவு ஆன்லைனில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.

அதனைத் தொடர்ந்து ஒரே தொகுதிக்கு பாஜக, பாமக, அதிமுக என 3 கட்சிகளும் போட்டியிட்டதால் போட்டியிடும் தொகுதிகள் இறுதியாவதிலும் நீண்ட இழுபறி ஏற்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்த திட்டத்தை ரத்து செய்து மேற்கு வங்கத்தில் கவனம் செலுத்தினர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுகின்றனர்.  

மார்ச் 27 : மத்திய அமைச்சரான ஸ்மிருதி இராணி கோவை தெற்கு மற்றும் சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு

மார்ச் 30 : பிரதமர் மோடி தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

மார்ச் 31 : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

மார்ச் 31 : உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விருதுநகர், கோவை தெற்கு தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ளார்.

ஏப்ரல் 1 : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரவக்குறிச்சியில் களம் காணும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

ஏப்ரல் 2 : பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமர் மோடி நாகர்கோவிலிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

 ஏப்ரல் 3 : அமித்ஷா ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்த பயணத்தின் போது, கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தமாகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக மோடி மற்றும் அமித்ஷா பரப்புரை மேற்கொள்வது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தையையும் பிரதமர் மோடி பற்றி பேசுவதையும் முற்றிலும் புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில், மோடி, அமித்ஷாவும் பாஜக வேட்பாளர்களுக்கு மட்டுமே பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் அதிமுக - பாஜக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Related Stories: