நீதிபதிகளை விமர்சித்த விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிபதிகளை  விமர்த்து பேசி  வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு  சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள்,  பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்டார். இதுதொடர்பாக வழக்கறிஞர் தேவிகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்டோர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி சென்னை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார்.தொடர்ந்து அவர் தாக்கல் செய்த 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்தநிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் 10 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, தற்போதைய மற்றும் முன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேச மாட்டேன் என்றும், ஊடகம்,  பத்திரிகை, சமூக ஊடகம் என எதிலும் பதிவேற்றம் செய்ய மாட்டேன் என்று கர்ணன் உத்தரவாதம் அளித்திருந்தார். இதை ஏற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், 10 வழக்குகளிலும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை விதித்தார். அதில், சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது,  விசாரணைக்கு  தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவர் 50 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தில்  ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி நிபந்தனைகளை மீறும்பட்சத்தில்  ஜாமின் ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: