தேர்தல் ஆணையம் மாற்றிய பெண் போலீஸ் அதிகாரி மேற்கு மண்டல ஐஜி ஆபிசில் அயல் பணியாக நியமனம்: காற்றில் பறந்த உத்தரவுகள்

சென்னை: தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்ட பெண் போலீஸ் அதிகாரியை, அதை விட ‘பவர் புல்’லான பதவியில், மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் அயல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணைய உத்தரவுகள் காற்றில் பறந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளுமா என்ற கேள்வி காவல் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி மெஜாரிட்டி இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளன. இதனால் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று வேலை செய்கின்றனர். சில அமைச்சர்கள் தங்கள் தொகுதி மட்டுமல்லாது தங்களுக்கு பக்கத்தில் உள்ள தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் கள நிலவரம் அவர்களை கலவரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலங்களிலேயே அதிமுக சரிவை சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளன. இதனால், மேற்கு மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளாக பார்த்து மேற்கு மண்டல அமைச்சர்கள் நியமித்து வந்தனர். அதில் கோவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்தவர் அனிதா. இவர், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். அமைச்சர் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டவர். இதனால், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், கோவை நகரிலும் இவர் வைத்ததுதான் சட்டம் என்ற அளவில் கோவை போலீசில் கோலோச்சி வந்தார். இவரால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் நடந்து வந்தது. இவரை எதிர்த்தாலோ இல்லை எதிர்ப்பதாக அவர் நினைத்தால் கூட அவர்களை காலி செய்து விடுவார்.

இதனால் இவரை மீறி அல்லது இவரைப் பகைத்துக் கொண்டு இவருக்கு கீழ் உள்ள பணிகளில் மட்டுமல்ல மேல் அதிகாரிகளாக இருந்தால் கூட பணியாற்ற முடியாத நிலைதான் இருந்தது. இவர் அமைச்சர் வேலுமணிக்காக தேர்தல் பணியாற்றுவதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரைத் தொடர்ந்து அவர், கோவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி பதவியில் இருந்து, கோவை போலீஸ் பயிற்சி பள்ளியின் கூடுதல் எஸ்பியாக அதாவது அதே மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். புதிதாக பணியமர்த்தப்பட்ட பிரிவு தேர்தலுக்கு தொடர்பில்லாத பிரிவு என்று கூறி அவரை நியமித்துள்ளனர். வேறு மாவட்டத்திற்கு கூட அவரை மாற்றவில்லை.

ஆனால், இந்தப் புதிய பணியிடமும், கோவை மாவட்ட எஸ்பி, டிஐஜி, மேற்கு மண்டல ஐஜியின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது. இந்தநிலையில், அந்தப் பதவியில் இருந்து மேற்கு மண்டல ஐஜியாக தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்ட தினகரனின் அலுவலகத்துக்கு அயல் பணியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு கூடுதல் எஸ்பியை ஐஜி அலுவலகத்தில் அயல் பணியாக நியமிப்பது இதுதான் முதல் முறை. ஏற்கனவே, மண்டல ஐஜிக்கள் அனைவரும் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களாகத்தான் நியமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் தினகரனுக்கு கீழ், அயல் பணியாக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். முன்பாவது கோவை மாவட்டத்தில் பணியாற்றியதால் அந்த ஒரு மாவட்டத்தை மட்டும்தான் நேரடியாக அதிகாரம் செலுத்தும் அதிகாரியாக இருந்தார்.

ஆனால் தற்போது மேற்கு மண்டல ஐஜியின் அலுவலகத்தில் அயல்பணியாக நியமிக்கப்பட்டதன் மூலம், கோவை முதல், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை மேற்கு மண்டல ஐஜியின் எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவரது கைக்கு வந்துள்ளது. இது மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மாற்றிய ஒரு அதிகாரியை, மறைமுகமாக அதாவது கொல்லைப்புறமாக யாருக்கும் தெரியாமல் தேர்தல் பணியாற்ற அனுமதி அளித்துள்ளது ஆணையத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையே காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற பரபரப்பும் தற்போது எழுந்துள்ளது.

Related Stories: