போச்சம்பள்ளி அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்-அதிகாரிகள் அலட்சியம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி ஐந்து ஆலமரம் பகுதியில், சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக மின்சார வசதியின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, குடியிருப்புக்கு மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, வீடுகளுக்கு மின் சப்ளை மற்றும் தெருவிளக்கு அமைக்க மின்கம்பம் நடப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பின்மையால், சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் முறையிட்டதால், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து, பழுதான மின்கம்பத்திற்கு அருகே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிய கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால், புதிய மின்கம்பத்திற்கு மின்மாற்றம்  வழங்கப்படவில்லை. இந்நிலையில், பழுதான கம்பம் கீழே விழுந்து விடாத வகையில் மின் கம்பிகள் தாங்கி பிடித்தவாறு உள்ளன.

பலத்த காற்றடித்தால் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே, உயிர்பலிக்கு காத்திருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: