விரைவாக நீதி கிடைக்க செய்வதில் தமிழக போலீசுக்கு 5ம் இடம்: 2ம் இடத்திலிருந்து பின்தங்கியது

சென்னை: விரைவாக நீதி கிடைக்க செய்வதில் 2019ம் ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு காவல்துறை கடந்த 2020ம் ஆண்டில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டாடா டிரஸ்ட் அமைப்பு சார்பில் இந்திய நீதி அறிக்கை என்ற தலைப்பில் காவல்துறை சார்பில் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கச்செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 10 மதிப்பெண்களுக்கு 5.71 மதிப்பெண்கள் பெற்று கர்நாடக மாநிலம்  முதல் இடத்தில்  உள்ளது. இதனை தொடர்ந்து சட்டீஸ்கர், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

நீதியை விரைவாக கிடைக்கச்செய்வதில் தமிழ்நாடு போலீசுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறை இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி காவலர் பயிற்சிக்கான நிதி செலவிடுவதிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. தேசிய அளவில் ஒவ்வொரு ஆண் அல்லது பெண் காவலரின் பயிற்சிக்காக சராசரியாக ரூ.8000 நிதி செலவிடப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் ரூ.2 மட்டும் செலவிடப்படுகின்றது. மிசோரத்தில் காவலர் பயிற்சிக்கு ரூ.32 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவிடப்படுகின்றது. டெல்லி ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் செலவழிக்கின்றது. 2020ம் ஆண்டு ஜனவரி நிலவரப்படி தமிழ்நாடு காவல்துறையில் 9.4 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளது. பாலின சமத்துவத்தை பொறுத்தவரை தமிழகத்தில் 18.5 சதவீதம் பெண் கான்ஸ்டபிள்கள் இருக்கின்றனர். 24.5 சதவீதம் பெண் அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 23 காவலர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் சராசரியாக 5400 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: