குழந்தைகளின் திறமையை மேம்படுத்த 100 பள்ளிகளுக்கு சிறப்பு அந்தஸ்து: டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: குழந்தைகளின் திறமையை மேம்படுத்த டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு குழந்கைளின் திறமையை வளர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 100 பள்ளிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த டெல்லி அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பள்ளிகளில் குழந்தைகளின் இயற்கையான திறன் மற்றும் அவர்களுக்கு ஆர்வமான துறைகளில் அவர்களை மேம்படுத்தும் பணிகளை இந்த பள்ளிகள் செய்யும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி துணை முதல்வர் சிசோடியா கூறியதாவது:  சிறப்பு அங்கீகாரம் அளித்த பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம், விஷீவல் ஆர்ட், 21ம் நூற்றாண்டுக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்படும்.

அடுத்த தலைமுறை சவால்களை சந்திக்க நமது குழந்தைகளை இந்த பள்ளிகள் தயார் செய்யும். ஒவ்வொரு குழந்தையும் திறன் வாய்ந்தது. மேலும் குழந்தைகள் மிகப்ெபரிய வரம். எனவே நாங்கள் அவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும். சிறப்பு அந்தஸ்து பெற்ற பள்ளிகள் நமது குழந்தைகளுக்கு சரியான வாய்ப்பு வழங்கும். மேலும் அவர்களது இயற்கையான திறமைகளை மேம்படுத்தும். அவர்களது ஆர்வத்தை மேலும் மேலும் ஊக்குவிக்கும். தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் இந்த பள்ளிகள் அவர்களது முடிவுக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: