ராமாக்காள் ஏரியை சுற்றுலா தலமாக்க துரித நடவடிக்கை-பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி : ராமாக்காள் ஏரியை சுற்றுலா தலக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார 265 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சனத்குமார நதியில் கலந்து கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேர்கிறது.

இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல்போல் காட்சியளிக்கும். தற்போது, சின்னாறு அணையில் இருந்து ராமாக்காள் ஏரிக்கு ஒருசொட்டு நீர்கூட வருவதில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக ஏரி நிரம்பாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தலமாக்கும் பணி நடந்தது. ஏரியில் பறவைகள் தங்கு வகையில் தீவு திடல் அமைக்கப்பட்டது.

பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் அரசு நிதி சேர்ந்து சுமார் ₹2.81 கோடி மதிப்பீட்டில் பூங்கா, இளைப்பாறுவதற்கு இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை, மரச்செடிகள் மற்றும் வேலி அமைக்கப்பட்டது. நாளடைவில் முறையாக பராமரிக்காததால், பூங்காவில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. நடைபயிற்சி மேடை கற்கள் பெயர்ந்து சிதறியுள்ளது. குடிமகன்களின் கூடாரமாக மாறிய நடைபாதையில் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து தர்மபுரி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் சந்திரமோகன் கூறியதாவது:

கடந்த 2013ம் ஆண்டு பொதுமக்களின் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ராமக்காள் ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தலமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏரியை அழகுபடுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. செய்த வரைக்கும் பூங்காவை முறையாக பராமரிக்கவும் இல்லை. கடந்த 50 ஆண்டுக்கு முன்பு ராமக்காள் ஏரிக்கு பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வரும். இதனால், ஆண்டுதோறும் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும்.

இதன்மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர். நாளடைவில் ஏரி தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. விவசாயிகள் மாற்று தொழிலுக்கு மாறி விட்டனர். விளை நிலங்களும் தரிசாகி பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, சின்னாற்றில் இருந்து தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: