சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் ேகாவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். தொகுதியில் தனி ஆளாக பிரசாரமும் செய்து வந்தார். இந்நிலையில், திடீரென்று அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியதாவது: தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தேன். அது பதிவு செய்யப்படாததால், சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். பிறகு பிரசாரத்தையும் தொடங்கினேன்.
நான் சென்ற இடங்களில், முஸ்லிம் ஓட்டுகளை பிரிப்பதற்காக நான் பணம் வாங்கிக்கொண்டு ேபாட்டியிடுவதாக சொல்கிறார்கள். அமைச்சர் வேலுமணி பணம் கொடுத்தாரா, கமல்ஹாசன் தந்தாரா என்று கேட்கிறார்கள். பிரசார அனுமதிக்கு போலீசிடம் போனால், அதை அதிமுக பார்த்துக்கொள்ளும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நான் 3 பெண் குழந்தைகளை வைத்திருக்கிறேன். பணம் வாங்கினேன் என்ற கெட்ட பெயரை எடுக்க விரும்பவில்லை. அதனால் போட்டியில் இருந்து விலகுகிறேன். தேவைப்பட்டால் என் நண்பர்களுக்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.