திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கியது: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த திருவிழா  ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக  துவங்கியது.  இந்த ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடந்தது.

திருவிழா நடைபெறும் பதினொரு நாட்களில் தினமும் காலை  மற்றும் மாலை நேரங்களில், அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனம் பூத வாகனம் மற்றும் ரிஷப வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

விழாவையொட்டி,  ஆலய மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பக்திப்பாடல்கள், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: