நேரு உள்விளையாட்டு அரங்கில் 2000 பேருக்கு தடுப்பூசி முகாம் ஏப்ரல் மாத இறுதிக்குள் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: நேரு உள்விளையாட்டரங்கில் சென்னை மாநகராட்சி சார்பில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது.  மேலும் ஏப்ரல் இறுதிக்குள் 25-30 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். மேலும் இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரமாண்ட முகாம் துவங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 45-59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆதார் கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதாவது ஒன்றைக்காட்டி இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

10 மருத்துவக்குழு, தற்காலிக படுக்கைகள் ஆகியவை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் பணிசெய்ய வருபவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி டிரைவருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போடப்படும். மேலும் ஏப்ரல் இறுதிக்குள் 25-30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் பள்ளிகள் கண்டறியப்பட்டால் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

Related Stories: