நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!

சென்னை: திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனுவை நிராகரிக்க அமமுக-வினர் கோரிக்கை விடுத்திருந்தனர். வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பமிட்டுள்ளதால் மனுவை நிராகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது.

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 26 வேட்பாளர்களுக்கான வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனுவில் அரசு தரப்பு வழக்கறிஞர் பரிந்துரை கையெழுத்திட்டுள்ளதால் உதயகுமாரின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி அமமுக கூட்டணி கட்சியான மருதுசேனை அமைப்பின் வேட்பாளர் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2 மணி நேர தாமதத்திற்கு பின் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றது.

முன்னதாக வேட்புமனு பரிசீலனையை தனிதனியாக நடத்துவதற்கு அதிமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர்கள் வாக்குவாதம் செய்த பின்னர் ஒரே அறையில் அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பமிட்டுள்ளதால் மனுவை நிராகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: