கீழ்வேளூர் ரயில்வே கேட்டில் ரயில் பாதை சாலை தரைமட்டத்தை விட உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில் நிலையம் அருகே கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்கள் மாறி செல்ல 3  ரயில் பாதைகள் உள்ளது. 3 ரயில் பாதையில் நடுவில் உள்ள ரயில் பாதையை கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஜல்லிகள் கொண்டு பேக்கிங் செய்யும்  இயந்திரம் கொண்டு சீரமைக்கப்பட்டது. அப்போது ரயில் பாதையின் பக்கவாட்டில் உள்ள சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு பின்னர் அதே இடத்தில்  சிலாப்புகள் போடப்பட்டது.ரயில் பாதை சீரமைக்கும்போது ஏற்கனவே இருந்ததை விட சுமார் அரை அடி உயரத்திற்கு ரயில் பாதை உயர்த்தப்பட்டுள்ளது. சிமென்ட் சிலாப்புகள்  ரயில் பாதையின் மேல் மட்டத்துக்கு போடாமல் சுமார் கால் அடி தாழ்வாக போடப்பட்டது.

இந்நிலையில் லாரி, பேருந்துகள் போன்ற கனரக  வாகனங்கள் சென்ற வருவதால் சிமென்ட் சிலாப்புகள் மண்ணில் பதிந்ததால் தற்போது ரயில் பாதை மட்டத்தில் இருந்து சிமென்ட் சிலாப் தாழ்வாக  மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் ரயில் பாதையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் ரயில்  பாதையை கடந்து செல்லும்போது பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இறங்கி கொண்டால் தான் இருசக்கர வாகனம் ரயில் பாதையை கடந்து செல்ல  முடியும் அளவுக்கு உள்ளது.

மேலும் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் ரயில் பாதையை கடக்கும்போது வாகனத்தின் அடிப்பகுதி ரயில் பாதையில் தட்டுகிறது. மேலும் சிமென்ட்  சிலாப்புகள் இடைவெளி விட்டு போடப்பட்டு இடைவெளியில் முக்கால் கருங்கல் ஜல்லி போடப்பட்டுள்ளதால் கருங்கல் ஜல்லி இருசக்கர வாகன  சக்கரத்தில் பட்டு தடுமாற செய்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிமென்ட் சிலாப்புகள் இடைவெளி இல்லாமலும், ரயில்  பாதையின் மேல் மட்டத்துக்கு சிலாப்புகளை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

Related Stories: