ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே நாளில் 4 மிட்ராக்ளிப் சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: ஒரே நாளில் கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 4 நோயாளிகளுக்கு ‘மிட்ராக்ளிப்’ சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. ஜப்பானில் ஒரே நாளில் 3 ‘மிட்ராக்ளிப்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அப்போலோ மருத்துவமனையின் சீனியர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சாய் சதீஷ் அடுத்தடுத்து ‘மிட்ராக்ளிப்’ சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததன் மூலம் அப்போலோ மருத்துவமனை புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது: ஆசிய கண்டத்தில் பல மைல்கல் சாதனைகளை எங்களது அறுவை சிகிச்சை நிபுணர்கள் படைத்துவருகிறார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்வதினால் அபாயமுள்ள கடுமையான மிட்ரல் கசிவுள்ள நோயாளிகளுக்கு ‘மிட்ராக்ளிப்’ மூலம் சிகிச்சையளிக்க முடிகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 100,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருத்துவ முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் மருத்துவ நடைமுறையைச் செய்வதற்கு அங்கீகாரம் பெற்ற ஒரு சில மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனையும் ஒன்று என்பதில் பெருமை, என்றார்.

Related Stories: