×

என் கதைக்கு நியாயம் கற்பிக்கவில்லை!

நன்றி குங்குமம் தோழி

இயக்குநர் ராம் ‘பேரன்பு’ குறித்து மனம் திறக்கிறார்

ஒரு அப்பா, செரிபிரல் பால்சி (பெருமூளை வாதம்), மூளை சார்ந்த பிரச்னையுடன் பிறந்த மகள். பதின்மூன்று வயது வரை போராடி வளர்த்த தாய், இனி என்னால் முடியாது என கணவரையும், மகளையும் விட்டு பிரிந்து இன்னொரு வாழ்க்கையைத் தேடி சென்று விடுகிறார். மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு அப்பாவிற்கு வருகிறது. 14 வயது பதின் பருவம், தான் ஒரு பெண், அப்பா ஒரு ஆண் என்னும் உணர்வுகள் அவளுக்கு எழுகிறது. அப்பாவை விட்டு விலகத் துவங்குகிறாள். அவள் வயதுக்கே உரிய பருவ உணர்வுகளும் ஆட்கொள்கிறது.

மாதவிடாய் கால நாப்கின்களை கூட தன்னால் மாற்றிக்கொள்ள முடியாத நிலை. தனியாகவும் விட்டுச் செல்ல முடியாது. தகப்பனாக வெளியில் சென்று வருமானம் ஈட்ட வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது. மகளை இப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும் என்ற கவலை... முடிவு என்ன என்பதுதான் ‘பேரன்பு’ திரைப்படம். ‘நானும் ஒருத்தரை எங்க வீட்டுப் பக்கத்துல கல்லால அடிச்சிருக்கேன். இந்த படம் பார்த்த பிறகுதான் என் தப்பு எனக்கு புரிஞ்சது. எப்படியாவது அவரை தேடிப்பிடிச்சு மன்னிப்புக் கேட்கணும்...’ இப்படி ஒரு இளைஞர் படம் பார்த்துட்டு வெளியே வந்து என்னிடம் சொன்னார்’… என்று மனநிறைவுடன் ஆரம்பித்தார் இயக்குநர் ராம்.

பேரன்பு?!…

2003, ஒரு பயணத்துல சந்தித்த நபரின் கதையின் தாக்கம் தான் ‘பேரன்பு’ முதல் கோடு உருவாகக் காரணம். அடுத்து மரியா. அவங்கதான் படத்துல சாதனாவுக்கு பயிற்சி கொடுத்தாங்க. அவங்களும் அவங்க வாழ்க்கையும் one of the inspiration. எல்லாமுமா சேர்ந்துதான் ‘பேரன்பு!’  

உங்களுடைய படங்கள் பெரும்பாலும் விவாதப் பொருளா மாறிடுதே?

நல்லா இருக்கு, நல்லா இல்லை... இதை சொல்ல வைக்க நிறைய படங்கள் வருது. ஆனால் ஒரு விவாதப் பொருளா மாற படங்கள் குறைவா இருக்கே அதை என்னுடைய படங்கள் பூர்த்தி செய்யறது நல்ல விஷயம்தானே.

ஒரு அப்பாவே மகளுக்காக பாலியல் தொழிலாளியை தேடுவாரா? ஒரு தாய் கணவனைப் பிரியலாம், ஆனால் குழந்தையை விட்டு பிரிந்து செல்வாளா?

இதற்கான பதில் படத்திலேயே இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புரிதல்கள் மற்றும் கருத்துகள் இருப்பது சகஜம். நான் பார்த்த வரை பொது மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இந்தக் கதையைப் பற்றிய சரியான புரிதல் இருக்கு. சிறப்பான குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பலரும் இந்தப் படம் குறித்து பாராட்டுகளும், நன்றிகளும் சொல்றாங்க. ஒரு இயக்குநரா நான் என் கதைய திரைக்குக் கொடுத்திருக்கேன். அதைத் தவிர்த்து ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் சொல்ல ஆரம்பிச்சா ஏதோ என் படத்துக்கு நானே நியாயம் சொல்லிக்கிற மாதிரி ஆகிடாதா?!

கருப்பை அகற்றுதல், ஹார்மோன் கட்டுப்பாட்டு மருத்துவம் இதையெல்லாம் படத்தில் காட்டியிருக்கலாமே?

செரிபிரல் பால்சி, பெருமூளை சார்ந்த பிரச்னை. இதில் ஏகப்பட்ட தனிப்பிரிவுகள் இருக்கு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கும். எல்லா பிரச்னைக்குமான காரணங்கள் மற்றும் தீர்வுகளை ஒரே படத்துல சொன்னா அது ‘பேரன்பு’ படமா இல்லாம செரிபிரல் பால்சிக்கான டாக்குமென்டரி சாயலுக்கு மாறிடாதா? மறுபடியும் சொல்வது அதேதான். ஒரு இயக்குநரா நான் என் கதைக்கு நியாயம் கற்பிக்க என்றைக்கும் முற்பட மாட்டேன். ஒரு படைப்பு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்வுகளை உருவாக்கும். அதை அப்படியே விடுறதுதான் நல்லது!

ராம் என்றாலே அவருடைய படங்கள் பெரிய தாக்கத்தையும், கனத்த மனநிலையையும் மட்டுமே உருவாக்குதே, உங்க கிட்ட இருந்து ஒரு லைட் வெயிட்டா, ஜாலியான கதை வருமா?

‘நாலு வருடங்களுக்கு ஒரு முறை தான் என் படம் வெளியாகிறது. நடுவில் வரும் பெரும்பாலான படங்கள் அந்த லைட் வெயிட் மோட்லதானே இருக்கு. ‘தரமணி’ ஒரு கமர்சியல் கலந்த படமாதான் எனக்கு தோணுச்சு. அதேபோல் ‘பேரன்பு’ படமும் கமர்சியல் அளவிலும் நல்ல ரிசல்ட். முக்கியமா தயாரிப்பாளர்கள் சந்தோஷமா இருக்காங்க!.

எதிர்மறை விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?

அதையும் நான் என் படத்துக்கான வரவேற்பா எடுத்துக்கறேன். ஒரு கதை ஒரே விதமான கருத்துகளைக் கொடுக்கறதை விட வேறு வேறு விதமான கருத்துகளையும், கலந்துரையாடல்களையும் கொடுக்கும் போது படத்துக்கான லைஃப் இன்னும் அதிகமாகும். அதை நான் ஆரோக்கியமான விஷயமா பார்க்கறேன்!.

மம்மூட்டி - சாதனா?..

படம் முழுக்க விளக்கக்கூடிய டயலாக்குகள் இருந்திருந்தா நடிக்கவே தெரியாத ராம் கூட நடிச்சிருப்பேன். உணர்வுகள் சொல்லக்கூடிய கதை, அதனால்தான் மம்மூட்டி. எனக்கு பிடித்த நடிகர்கள்ல அவரும் ஒருத்தர். சீன் சொன்னா போதும் மனிதர் அப்படியே அமுதவனாக மாறிடுவார். சாதனா.. புத்திசாலி குழந்தை. கதை என்ன, நான் என்ன சொல்லப் போறேன் என்பதை புரிஞ்சி, என் கதைக்கு என்ன தேவை என்கிறதை உள்வாங்கி அப்படியே நடிச்சாங்க. சாதனாவுடைய அப்பா - அம்மா என்னை முழுமையா நம்பினாங்க. அதுக்கு பரிசு தான் அந்த பாப்பா கேரக்டர்.

அதற்கான பரிசும், பாராட்டும் சாதனாவுக்கும் நிச்சயம் உண்டு என்று ராம் முடிக்க டாக்டர் மரியா ஜோசப்பின் அவரை தொடர்ந்தார். இவர் சாதனாவிற்கு செரிபிரல் பால்சி குழந்தைகளின் குணாதிசயம் குறித்து பயிற்சி அளித்தவர். கேட்பவர்களும் யூகத்தில் பதில் சொல்பவர்களும் ஆயிரம் சொல்லலாம். அந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்குதான் உண்மை நிலை புரியும்’… இதுதான் மரியா ஜோசப்பின் மற்றும் ஆண்டவர் ஜெய்தேவ் இருவரின் ஒட்டுமொத்த கருத்து. ‘‘எனக்கு 42 வயதில் ஒரு மகள் இருக்காங்க. அவங்களுக்கும் செரிபிரல் பால்சி பிரச்னை உள்ளது’’ என்று பேச ஆரம்பித்தார் மரியா.

‘‘பிரியா, 100 மீ ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்றவர். நடனம் ஆடுவார். ‘பேரன்பு‘ படத்துல பார்த்த பாப்பா கேரக்டர்ல என்னவெல்லாம் இயக்குநர் ராம் காண்பித்தாரோ அதையெல்லாம் கடந்த 42 வருடங்களா நான் அனுபவிச்சுட்டு இருக்கேன். பார்க்கிறவங்களுக்கு பாவப்பட்ட குழந்தையுடன் கஷ்டப்படுறதா தெரியும். ஆனா உண்மையில் நாங்க தான்  ஆசீர்வதிக்கப்பட்ட பெற்றோர்கள். உங்க குழந்தைகளை நீங்க புரிஞ்சி வைத்திருப்பதை விட 100 மடங்கு அதிகமா இவங்க என்ன யோசிக்கிறாங்க, உணர்வுகளை வெளிப்படுத்துறாங்கன்னு சொல்ல முடியும்.

நான் ‘மரியா ஸ்பெஷல் எஜுகேஷன் சர்வீஸ்’ துவங்க என் மகள் தான் காரணம். அவளை போல் 1000 குழந்தைகளை பார்த்திருக்கேன். தினமும் 100க்கும் மேலான குழந்தைகளுடன் வாழ்கிறேன். செரிபிரல் பால்சியுள்ள 1000 குழந்தைகளுக்கும் வித்தியாசமான உடல், மன ரீதியான பிரச்னைகள் இருக்கும். நாமெல்லாம் இன்னைக்கு வாழ்கிற வாழ்க்கை இயற்கையானதா? குடும்பம், திருமணம் இயற்கை ஏற்படுத்திக் கொடுத்ததா? சமூகம்னா இதுதான், கல்யாணத்துக்கு பிறகு தான் தாம்பத்தியம் என்று கட்டுப்பாடுடன் வாழ்றோம். அது நம் மூளைக்கு தெரியும்.
 
செரிபிரல் பால்சி குழந்தைகளுக்கு இது தெரியாது. சிலருக்கு உணர்வு களே இருக்காது... சிலருக்கு அதீதமாக இருக்கும். ஊர் அறிய வெளிப்படுத்தக் கூடாதுன்னு கட்டுப்பாடெல்லாம் அவங்களுக்கு தெரியாது’’ என்றவரிடம் கருப்பை அகற்றுவது குறித்து வினவினோம். ‘‘கருப்பை நீக்குவதில் சட்ட சிக்கல் உள்ளது. ஒரு குழந்தை இப்படித்தான் வாழணும்னு இயற்கை முடிவு செய்துள்ளது. அதை மருத்துவம் என்கிற பேரில் மாற்றுவதற்கு  பதில் கருணை கொலை செய்திடலாம்.

அதே சமயம் ஹார்மோன்கள் கட்டுப்படுத்துவதால், புது பிரச்னைகள் ஏற்படும். ஸ்வீடன் போன்ற நாடுகளில் செரிபிரல் பால்சி குழந்தைகள் பருவம் அடைந்தவுடன் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கையை பாதுகாப்பாக வாழவும் பயிற்சி கொடுக்கிறாங்க’’ என்றார் மரியா ஜோசப்பின். மதுரையில் செரிபிரல் பால்சி குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி நடத்துகிறார் ஆண்டவர் ஜெய்தேவ். இவரின் 15 வயது மகனுக்கும் இதே பிரச்னை. ‘‘பேரன்பு படத்தை நான் என் மகன் மற்றும் பள்ளி குழந்தைகளுடன் பார்த்தேன். சினிமாவுக்கு போனா சிறிது நேரத்திலெல்லாம் என் மகன் தகராறு செய்வான்.

பேரன்பை அமைதியாக பார்த்தான். அவர்கள் புரிந்து கொண்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது. உலகம் நவீனமாக மாறி வந்தாலும், சாலையில் ஆடைகளைக் கழட்டி நிற்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டால் கல்லால் அடிக்கிறோம். இந்தப்படம் அந்த நிலையை மாற்றியிருக்கிறது. தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் வாழ்கிறேன். எங்களை போன்ற பெற்றோரின் கவலைேய, எங்களுக்கு பின் இவர்களுக்கு யார் பாதுகாப்பு? இதற்கு எங்களிடம் பதில் இல்லை.

பாலியல் உணர்வு நமக்கு மட்டும் இல்லை. இவர்களுக்கும் உண்டு. என் மகனின் உணர்வுக்கு அப்பாவாக நான் உதவ முடியாது என்று நான் நினைத்தால் அவன் கல்லடிக்குதான் ஆளாவான். ஒரு சில செரிபிரல் பிரச்னைக்கு உடற்பயிற்சிகளும், கவுன்சிலிங்கும் கைகொடுக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடாது. இப்போதும் சொல்கிறேன். உங்கள் குழந்தை செரிபிரல் பால்சி பிரச்னையுடன் மாஸ்டர் டிகிரி வாங்கியிருக்கலாம். அதே போல் இன்னொரு குழந்தையும் இருப்பார்கள் என ஒப்பிடாதீர்கள்’’ என்றார் ஜெயதேவ்.  

பேபி சாதனா

தேசிய விருது பெறவேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கியிருக்கிறார் பேபி சாதனா. ‘பேரன்பு’ படத்தில் சாதனாவின் ‘பாப்பா’ பாத்திரம் படம் பார்த்த பலரையும் மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். ஐந்து நிமிடங்கள் இரண்டு காலை சரித்து நம்மால் நடக்க முடியாது... ‘‘எல்லாத்துக்கும் ராம் அங்கிளுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். நான் துபாயில பதினோறாவது கிரேட் படிக்கிறேன். ராம் அங்கிள் கதை சொன்ன போது, சிறப்புக் குழந்தைகளின் கஷ்டங்கள், பெற்றோரின் நிலையை உணர்ந்தேன்.

அவர் சொன்னதை அப்படியே செய்தேன். என் கை, கால் முதல் நடப்பது வரை இப்படிதான் இருக்கணும்னு பயற்சி கொடுத்தாங்க. நான் தனிப்பட்ட முறையில் இந்த குழந்தைகளை நேரில் சந்தித்தேன். இப்படி நிறைய கட்டங்களுக்கு பிறகுதான் பாப்பாவா மாறினேன். மம்மூட்டி சார்க்கு மகளா நடிச்சது மற்றொரு இன்ப அதிர்ச்சி. அப்பா - அம்மா, என் பள்ளி எனக்கு பெரிய சப்போர்ட்.

சமீபத்துல எங்க பள்ளி மூலமா இதே மாதிரியான சிறப்புக் குழந்தைகளுக்கு சேவை செய்ய ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க. அதில் நானும் அவங்களுக்கு என்னால் முடிந்த உதவிய செய்தேன். அதற்கு ‘பிரின்ஸஸ் டயானா’ என்கிற விருதும் எனக்கு கிடைச்சது’’  என்னும் சாதனாவிற்கு தன் அம்மா போலவே நடனம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்வதுதான் ஆசையாம்.

- ஷாலினி நியூட்டன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!