காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிடக்கோரி மீனவர்கள் போராட்டம்!: கடல் வழியாகவும் படகுகளில் சென்று முற்றுகை..!!

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை கைவிடக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி  கப்பல் கட்டும் தளம் மற்றும் அதானி துறைமுகம் இயங்கி வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு இந்த பகுதியில் எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக காட்டுப்பள்ளியில் இருந்த மீனவ கிராம மக்களை தனியார் நிர்வாகமானது அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்தியது. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதால் நிரந்தர வேலை தருவதாக அப்போது எல் அன்ட் டி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த கப்பல் கட்டும் தளத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 140 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும் அவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே சொற்ப வருமானத்திற்கு பணியாற்றி வருகிறார்கள். தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என கூறி கடந்த மாதமும் மீனவ கிராம மக்கள் காட்டுப்பள்ளியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் பணி நிரந்தரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால் 1 மாதமாகியும் எந்த தீர்வும் எட்டப்படாத காரணத்தினால் இன்று மீண்டும் அதிகாலை முதல் காட்டுப்பள்ளியை சேர்ந்த மீனவ கிராம மக்கள், எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடல் வழியாகவும் படகுகளில் சென்று துறைமுகம் முற்றுகையிட்டுள்ளது. அதானி துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என தேசிய நீர் வழித்தட அலுவலகத்திற்கு அதானி நிறுவனம் கடிதம் எழுதியதாக தகவல் தெரியவந்துள்ளது. இதற்கும் மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு அதானி துறைமுகம் எழுதியுள்ள கடிதத்தை ரத்து செய்வதற்கான அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் மீனவ கிராமத்தை சேர்ந்த 140 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நீடித்து வருகின்றது. மறியல் காரணமாக துறைமுகம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: