மயிலாடுதுறை, வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாதது ஏன்?..புதிய பரபரப்பு தகவல்; தொண்டர்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: மயிலாடுதுறை, வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைமை மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அதற்குள், வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எம்பி விஷ்ணு பிரசாத், கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர். தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனிலும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்றிரவு வெளியிட்டது.

அதில் பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர், திருபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை, சோளிங்கர்-ஏ.எம்.முனிரத்தினம், ஊத்தங்கரை(தனி)- ஆறுமுகம், ஓமலூர்-மோகன் குமாரமங்கலம், உதகமண்டலம்- கணேஷ், கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார், காரைக்குடி-எஸ்.மாங்குடி, மேலூர்- ரவிச்சந்திரன், சிவகாசி-அசோகன், ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ், கிள்ளியூர்- ராஜேஷ்குமார், ஈரோடு கிழக்கு-திருமகன் ஈ.வே.ரா, தென்காசி-பழனிநாடார், அறந்தாங்கி-எஸ்.டி.ராமச்சந்திரன், விருத்தாசலம்-எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், நாங்குநேரி-ரூபி மனோகரன், கள்ளக்குறிச்சி(தனி)- மணிரத்தினம், திருவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ், திருவாடனை- ஆர்.எம்.கருமாணிக்கம், உடுமலைப்பேட்டை-தென்னரசு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் மயிலாடுதுறை, வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுத்தடிப்பதால் யார் வேட்பாளர்கள் என்று தெரியாமல் காங்கிரசார் திணறி வருகின்றனர். அதே நேரத்தில் யாரை ஆதரித்து பிரசாரம் செய்வது என்பதில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஏன்? என்பது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு மகன் கார்த்திக்குக்கு கேட்டு வருகிறார். மற்ற தலைவர்கள் மகன்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் என் மகனுக்கும் சீட் வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை அவர் வலியுறுத்தி வருகிறார்.

அதே போல முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் தனது மகன் அசன் ஆருணுக்கு சீட் கேட்டு வருகிறார். சென்னையில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதி என்பதால் அந்த தொகுதியை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், அடையாறு துரை, நாஞ்சில் பிரசாத், எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், யாருக்கு சீட்டை வழங்குவது என்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மயிலாடுதுறை தொகுதியை தனது ஆதரவாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி வருகிறார். இதே போல மற்ற கோஷ்டியினரும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குளச்சல் தொகுதியை தற்போதைய எம்எல்ஏ பிரின்ஸ் கேட்டு வருகிறார்.

தொடர்ந்து 2 முறை அவர் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர் தொகுதிக்கும், கட்சியினருக்கும் எதுவும் செய்யவில்லை. அவருக்கு சீட் வழங்க கூடாது. கட்சியில் காலம் காலமாக உழைப்பவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். விளவங்கோடு தொகுதியை தற்போதைய எம்எல்ஏ விஜயதாரணி கேட்டு வருகிறார். சொந்த தொகுதியில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத விஜயதாரணிக்கு சீட் வழங்க கூடாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது போன்ற பிரச்னைகளால் தான் 4 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: