வேட்பாளர் தேர்வில் குளறுபடி என புகார் காங்கிரஸ் கட்சியில் ஒருபுறம் உண்ணாவிரத போராட்டம், மறுபுறம் உண்ணும் போராட்டம்: சத்தியமூர்த்தி பவனில் பதற்றம்

சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குளறுபடி நடந்ததாக புகார் கூறி ஒரு தரப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய நிலையில், மறுபுறம் உண்ணும் போராட்டம் நடத்தியதால் சத்தியமூர்த்தி பவனில் நேற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.  தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி உள்ளனர்.  டெல்லியில் சோனியா தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்தில்  வேட்பாளர்களை இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.இந்நிலையில் ஒரு சில தொகுதிகளுக்கு இவர்கள் தான் வேட்பாளர்கள் என்ற தகவல் கட்சியினர் மத்தியில் வெளியானது. இதை அறிந்த ஆரணி நாடாளுமன்ற எம்பி விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், இந்த பட்டியல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி நேற்று காலை திடீரென காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதுகுறித்து விஷ்ணு பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக உழைத்தவர்களும், விசுவாசமாக இருந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள். மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள், சீட் தராவிட்டால் விலகி விடுவேன் என்று மிரட்டியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். உதாரணமாக சோளிங்கர் தொகுதிக்கு முனிரத்தினம் என்பவரை வேட்பாளராக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி உள்ளார்கள். பல தலைவர்கள் கட்சிக்காக உழைக்காத தங்கள் பிள்ளைகளுக்கு சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒரு எம்.பி. தனது மாமனாருக்கே சீட் வாங்கி இருக்கிறார். இப்படி மாமனார், மாமியார், அண்ணன், தம்பி, மகன், மருமகன் என்று ஒவ்வொருவரும் தொகுதிகளை பங்கு வைத்துக் கொண்டால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். தற்போது காங்கிரஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன.

எனவே டெல்லி மேலிடம் இதில் தலையிட வேண்டும் என்றார். இதை அறிந்த கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள்ளும், மாவட்ட தலைவர்கள் டில்லி பாபு, நாஞ்சில் பிரசாத், ரஞ்சன் குமார், அடையார் துரை உள்ளிட்ட ஏராளமானோர் விஷ்ணு பிரசாத்துக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு நிலவியது. மாலை வரை நடந்த போராட்டத்தை தொடர்ந்து சத்தியமூர்த்திபவனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வந்தார். இதையடுத்து, விஷ்ணு பிரசாத்தை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த போராட்டத்துக்கு இடையே, குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில், விஜயதாரணிக்கு சீட் கொடுக்கக் கூடாது அந்த தொகுதியை சேர்ந்த மோகனதாஸ், மது உள்ளிட்ட ஏராளமானோர் சத்தியமூர்த்தி பவனில் நேற்றிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் சத்தியமூர்த்தி பவன் நேற்று அல்லோலப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணம் இருந்தால் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம்

வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி டிவிட்டரில் கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்”காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. நீண்டகாலம் உழைத்த வெற்றி வாய்ப்புள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம்.

எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கவுரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு” என்று ஆக்ரோஷமாக கொட்டித் தீர்த்துள்ளார்.

Related Stories: