வேட்பாளர் பட்டியல் வெளியீட்டிற்கு பிறகும் பிரேமலதாவுடன் டிடிவி.தினகரன் ரகசிய பேச்சு?

சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர், அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், இறுதியாக 50 இடங்கள் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை முன்னிறுத்த வேண்டும் என தேமுதிக தெரிவித்தது. இதை டிடிவி.தினகரன் ஏற்றுக்கொள்ளாததால் இரு கட்சிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், டிடிவி.தினகரன் அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 195 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக தற்போது அமமுகவிடம் 23 சீட்கள் மட்டுமே உள்ளது. இதனால், அமமுக-தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு பெற்றதாக கூறப்பட்டது.

இந்தநிலையில், நேற்று பிரேமலதா விஜயகாந்த்துடன் கூட்டணி குறித்து டிடிவி.தினகரன் இறுதிகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ‘அதிமுகவை எதிர்த்து களம் காண டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல், முதல்வர் வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். ஆனால், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் கூட்டணியை இறுதி செய்ய முடியும்’ என பிரேமலதா கறாராக தெரிவித்துள்ளார். சுமார் 10 நிமிடங்களாக தொலைபேசியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, மீதம் உள்ள 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் இன்று வெளியிட உள்ளார்.

Related Stories: