மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று மதுரையில் யானை கட்டி போரடித்த பட்டதாரி: பழந்தமிழர் வரலாறு திரும்புதா?

மேலூர்: மதுரை அருகே யானையை வைத்து விவசாயி போரடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியை சேர்ந்தவர் மதன் பாபு (26). பி.டெக் பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், விவசாய ஆர்வத்தில் வேலையை ராஜினாமா செய்தார். மதுரை மேலமாசி வீதியில், இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். இவர் அரசு அனுமதியுடன் சுமதி என்ற 40 வயது பெண் யானையை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த யானையை வாடகைக்கு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வயலில் அறுவடை செய்த நெல்லை, யானையை வைத்து போரடித்து, அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போர் அடித்தது பழந்தமிழர் வரலாறு என கூறுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த காட்சி உள்ளதாக பலரும் கமென்ட் அடித்து வருகின்றனர்.

மதன்பாபு கூறுகையில், ‘‘4 தலைமுறையாக யானை வளர்க்கிறோம். தாயும் விவசாயிதான். ஆகையால் எனக்கும் விவசாயம் மீது ஆர்வம் ஏற்பட்டது. மாட்டின் சாணம், யானையின் சாணம் ஆகியவற்றை உரமாக பயன்படுத்தி, இயற்கை விவசாயமும் செய்து வருகிறோம். டிராக்டர் வைத்து போர் அடிக்கிறோமே, யானையை வைத்து அடித்தால் என்னவென்று தோன்றியது. எங்களது 13 ஏக்கர் விவசாய நிலத்தில், 5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளோம். அந்த 5 ஏக்கரில் விளைந்த நெல்லை, ஒரே நாளில் யானையை வைத்து போர் அடித்தோம்” என்றார்.

Related Stories: