துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய பெண் கைது: 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

பெங்களூரு:  பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருபவர்களை சுங்கத்துறை மற்றும் விமான நிலைய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்து, பின்னர் தான் வெளியே அனுப்பி வைக்கின்றனர். இந்த சோதனையில் அவ்வப்போது சிலர் சிக்கி கொள்வது உண்டு. பெரும்பாலும் தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள்தான் அதிகளவு மாட்டி கொள்வார்கள். இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த பெண் ஒருவர் பிடிப்பட்டுள்ளார்.

 முன்கூட்டியே இது குறித்து விமான நிலைய உளவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுடன், விமான நிலைய உளவு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்து துபாயில் இருந்து வரும் விமானத்தை மட்டும் நோட்டுமிட்டு, சோதனை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, முறையான பதில் இல்லை. இதையடுத்து முதுகு வலிக்காக பொறுத்தியிருந்த பேண்டேஜ் மீது சந்தேகம் எழுந்தது. அதிகாரிகள் ஸ்கேன் செய்தபோது, அதில் பேஸ்டாக மாற்றப்பட்ட தங்கம், சீட் வடிவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 அதன் மொத்த எடை 1 கிலோ 270 கிராம் இருக்கும் என்று தெரியவந்தது. மொத்த மதிப்பு ரூ.59 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பெண் சென்னையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: