உத்தரகாண்ட் மாநிலத்தின் 9-வது முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து.!!!

டேராடூன்: உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் அதிருப்தி அடைந்தனர். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிர்கொள்ள தயக்கம் காட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று முன்தினம் டெல்லியில், நேரில் சந்தித்து மாநில நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் அளித்தார். தொடர்ந்து, இன்று புதிய முதல்வரை தேர்வு செய்யும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் நடந்தது. கூட்டத்தில், பாஜக எம்பியான தீரத் சிங் ராவத் (56) என்பவர் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மாலை 4 மணியளவில் உத்தரகண்ட் மாநிலத்தின் 9-வது முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். மாநில ஆளுநர் ராணி மவுரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். தீரத் சிங் ராவத் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

பிரதமர் மோடி வாழத்து:

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்ற ஸ்ரீ தீரத் சிங் ராவத்க்கு வாழ்த்துக்கள். அவர் பரந்த நிர்வாக மற்றும் நிறுவன அனுபவத்தை அவருடன் கொண்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் அரசு தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அளவிடும் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: