பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: காரில் பாலியல் தொந்தரவு கொடுத்த சிறப்பு டிஜிபி மீது, பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வர் பிரச்சார பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சிறப்பு டிஜிபி, பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறி தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி, காரில் இருந்து உடனே இறங்கிவிட்டார். பின்னர், இச்சம்பவம் குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது சிறப்பு டிஜிபி ஆதரவாளரான செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பெண் ஐபிஎஸ் அதிகாரி வந்த காரை 100 பேர் கொண்டு போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவரது கார் சாவியை எஸ்பி கண்ணன் எடுத்து வைத்து கொண்டார். பிறகு ஒருவழியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சென்னை வந்து உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின்படி சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், பாலியல் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் ஜெய ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. மேலும், பாலியல் புகாரின் மீது சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பு டிஜிபி மற்றும் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற கோரி புகார் அளித்து இருந்தனர். ஆனால் பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் உள்துறை செயலாளர் பிரபாகர் செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் மாலே மாலிக், தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், விழுப்புரம் சிபிசிஐடி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி, செங்கை எஸ்பி கண்ணன் குறித்த அறிக்கை அனுப்பி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் எலெக்‌ஷன் தொடர்பு இல்லாத பணியான வணிக புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் எஸ்பி கண்ணன் மீது பலாத்கார வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக எஸ்பி கண்ணனை சஸ்பெண்ட் செய்தும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில்கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த சுந்தரவதனன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த துரை. சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், இந்த வழக்கில் முக்கிய நபரான சிறப்பு டிஜிபி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: