திருவள்ளுவர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை வேலூர் வருகை: 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வேலூர்:வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை வேலூர் வருகிறார். இதையொட்டி வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 அடுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா மற்றும் நாராயணி பீடத்தில் மகாலட்சுமி யாகம் நாளை நடக்கிறது. இந்த இரு நிகழ்ச்சிகளில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு சென்று அங்கு தங்குகிறார். நாளை காலை கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்கு வருகிறார்.

காட்பாடி அடுத்த சேர்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு பிற்பகல் 3 மணியளவில் வேலூர் புரம் தங்க கோயிலுக்கு ஹலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கு நடக்கும் மகாலட்சுமி யாகத்தில் கலந்து கொள்கிறார்.

குடியரசு தலைவர் வருகையொட்டி வேலூரில் வடக்கு மண்டல ஐஜி சங்கர் தலைமையில் வேலூர் சரக டிஐஜி காமினி மேற்பார்வையில் வேலூர் எஸ்பி செல்வகுமார், ராணிப்பேட்டை எஸ்பி சிவக்குமார், திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார், திருவண்ணாமலை எஸ்பி அரவிந்த் மற்றும் திருவள்ளுவர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிகள் உட்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காட்பாடி மற்றும் வேலூரில் 5 அடுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளை குடியரசு தலைவரின் பாதுகாப்பு படை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

Related Stories: