ஆட்சிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி: டெல்லி சென்று வந்த நிலையில் உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா.!!!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. இம்மாநில பாஜக எம்எல்ஏ முன்னா சிங் சவுகான், முதல்வர் ராவத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் கட்சி நிலைமையை ஆய்வு செய்ய ராமன் சிங் தலைமையிலான பாஜகவின் மத்திய குழு டேராடூன் சென்று விசாரணை நடத்தியது. அதில் உத்தராகண்ட் பாஜகவின் பொதுச் செயலாளர்  துஷ்யந்த் கவுதமும் கலந்து கொண்டார்.

இந்த குழுவினர் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர், தங்கள் அறிக்கையை தலைமையிடம் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து கட்சியின் உத்தரவின் அடிப்படையில் முதல்வர் திரிவேந்திர சிங்  ராவத் டெல்லிக்கு நேரில் வந்து பதிலளிக்க  அறிவுறுத்தப்பட்டது. அதனால், நேற்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த  தலைவர்களை உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தார். மாநில பாஜக தலைவர்கள் சிலருக்கு  அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் டெல்லி வந்து சென்றுள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகிய நிலையில், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவிடன் திரிவேந்திர சிங் ராவத் சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திரிவேந்திர சிங் ராவத், இந்த மாநிலத்திற்கு நான்கு ஆண்டுகள் சேவை செய்ய கட்சி எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பை அளித்தது. அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. முதல்வராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை இப்போது வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று கட்சி இப்போது முடிவு செய்துள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன். பாஜக சட்டப்பேரவை கட்சி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories: