50 -50 பார்முலாவுக்கு ஒத்துழைக்காத இ.பி.எஸ்...! அதிமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோதல் என தகவல்

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே மோதல் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, பாஜ கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் உள்ளது. இந்நிலையில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை வெளியிட்டது. இதனிடையே 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பதால் இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுக்கு பாதி என சரிசபமாக வேட்பாளர்களை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் வலுறுத்தினார். முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற 6 வேட்பாளர்களில் 3 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சண்முகநாதன், தேன்மொழி பெயர் முதல் பட்டியலிலேயே இடம்பெற்றது. எடப்பாடி ஆதரவாளர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பெயர்கள் மட்டுமே முதல் பட்டியலில் இருந்தது. செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் பெயரே இடம்பெறாத நிலையில் நிலக்கோட்டை வேட்பாளராக தேன்மொழியை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். முதல் பட்டியலில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், அன்வர்ராஜா போன்ற முன்னோடிகள் பெயர் இல்லை.

50: 50 ஃபார்முலா காரணமாக முன்னோடிகள் பெயர் அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 50: 50 ஃபார்முலா என்ற திடீர் திருப்பத்தால் எடப்பாடி பழனிசாமியை நம்பி இருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஓபிஎஸ் பங்கில் வேட்பாளர் ஆவதற்காக ஏராளமான அதிமுகவினர் அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இருவரும் சேர்ந்து கையெழுத்து இட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். கருத்து வேறுபாடால் ஓபிஎஸ் பங்கேற்ற மகளிர் தின விழாவில் இபிஎஸ் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

Related Stories: