சிவகாசி பகுதியில் அதிகாரிகள் தொடர் ஆய்வு பட்டாசு ஆலைகள் இன்று முதல் மூடல்: லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்

சிவகாசி: பட்டாசு ஆலைகளில் அதிகாரிகளின் தொடர் ஆய்வினால் இன்று (மார்ச் 8) முதல் அனைத்து பட்டாசு ஆலைகளையும் மூட பட்டாசு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உப தொழில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். பட்டாசு ஆலைகளில் விதிமீறல்களே வெடி விபத்திற்கு காரணமென பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் குழுக்கள் அமைத்து சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் விதிகள்மீறி செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்து தற்காலிகமாக உற்பத்திக்கு தடை விதித்தனர். அதிகாரிகளின் தொடர் ஆய்விற்கு அச்சமடைந்து பட்டாசு ஆலைகளை உரிமையாளர்கள் படிப்படியாக மூடி வருகின்றனர். இந்நிலையில், இன்று (மார்ச் 8) முதல் அளைத்து பட்டாசு ஆலைகளையும் மூட முடிவு செய்திருப்பதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் கூறுகையில், ‘‘சாத்துார், சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் நடந்த வெடிவிபத்துகளில் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் குழுக்கள் அமைத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 50 சதவீத பட்டாசு ஆலைகள் பூட்டப்பட்டது. தற்சமயம் பட்டாசுக்கு பெரிய அளவில் ஆர்டர் இல்லை. ஏற்கனவே ஸ்டாக் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்வதிலும் சிரமம் உள்ளது. இதனாலும் ஆலைகள் முழுமையாக மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடமும் பேச உள்ளோம்’’ என்றார்.

பட்டாசு ஆலைகளில் மத்திய,மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: