துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி சரக்கு பெட்டகம் தொடர்பாக துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்பபெறாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று, துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், அமைப்பின் ஆலோசகர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2015 அக்டோபரில் அறிவிப்பு வெளியிட்டனர்.

முதலில் இணையம் என்று இருந்ததை மாற்றி கன்னியாகுமரி - கோவளம் இடையே என்று அறிவிக்கப்பட்டது. துறைமுகம் அமைய தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக நலன், சுற்றுச்சூழல், நிதி நிலை ஆகிய5 சாத்தியக்கூறுகளும் இந்தத் திட்டத்தில் இல்லை என மத்திய அரசு அமைத்த குழுவே தெளிவுப்படுத்தியதால் 2019ல் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது தனியார் பங்களிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த வாரம் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தில் இருந்து கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க தனியார்கள் விண்ணப்பிக்கலாம் என கூறி உள்ளனர்.

நாங்கள் விசாரித்தவரை அதானிக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. விழிஞ்ஞம் துறைமுகம் பணி மேற்கொண்டு வரும் அதானிக்கு அங்கு நிறைய சிக்கல்கள் உருவாகி இருக்கிறது. அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தற்போது கன்னியாகுமரியை அழிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இது மீனவர்கள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் பாதிக்கிற திட்டம். கடலுக்கு அடியில் 3 கோடி டன் வரை பாறைகள் உடைக்கப்பட வேண்டும். அவ்வாறு உடைக்கப்படும் போது என்ன நிகழும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவர், அரசு அதிகாரி போல் செயல்படவில்லை. அவர் யாருக்கோ சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

குமரி மாவட்டத்திலிருந்து சந்திக்க சென்ற பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசவில்லை. தற்போது தூத்துக்குடி துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மீண்டும் துறைமுக எதிர்ப்பு இயக்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும். அரசியல் போராட்டங்களாக, அறவழி போராட்டங்களாக இது அமையும். எக்காரணத்தை கொண்டும் குமரி மாவட்ட மக்கள் டெல்லிக்கு அடிமையாக மாட்டார்கள் . இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>