நாகர்கோவிலில் நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகள்: விபத்துக்கள் அபாயம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வெட்டூணிமடம் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் வெட்டூர்ணிமடம் பகுதியில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்த சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையொட்டி உள்ள திருப்பம், அபாயகரமான திருப்பமாக உள்ளது. பல சமயங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக இந்த பகுதியில் உள்ள பள்ளி எதிரில், சாலை ஓரத்தில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. நாள் தோறும் கட்டிட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மலை போல் குவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த பகுதி விபத்து பகுதியாக உள்ள நிலையில், கட்டிட கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலை பகுதியில் இவ்வாறு மண், கற்களை கொட்டுபவர்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் வழி விட முடியாத அளவுக்கு இந்த கட்டிட கழிவுகள்  உள்ளன என்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இதை கண்காணித்து உடனடியாக அகற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கை ஆகும்.

Related Stories:

>