கடந்த காலத்தில் செய்த ஊழல்!: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்தி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தமிழகத்தை ஆட்சி செய்கிறது...ராகுல் காந்தி விமர்சனம்..!!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தை பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக கூறியுள்ள ராகுல், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் பேசியதாவது, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். கூட்டணி உறுதியாக தான் உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதி பங்கீடை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் எங்களது நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ராகுல்காந்தி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முதலமைச்சரை ஆட்டி வைப்பதாக கூறியுள்ளார். கடந்த காலங்களில் செய்த ஊழல் காரணமாக பாஜக-வின் மிரட்டலுக்கு எடப்பாடி பழனிசாமி அடிபணிந்து நடப்பதாகவும் ராகுல் விமர்சித்திருக்கிறார். நாட்டின் அரசியல் சட்டப்படியான அமைப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சொந்தமானதல்ல. இந்திய மக்களுக்கே சொந்தமானது என்பதை மக்கள் எப்போது உணர்கிறார்களோ?... அரசு அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்.க்கு சொந்தமானது அல்ல என்பதை எப்போது மக்கள் உணர்கிறார்களோ? அப்போது மாற்றம் வரும். வரும் தேத்தலில் அது நடக்க வேண்டும். வரும் தேர்தல் தமிழக அரசை அவர்களது பிடியில் இருந்து மீட்பதற்கானது. தமிழக மக்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இங்கிருப்பதாக கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், தமிழக முதலமைச்சர் அடிபணிந்து செல்கிறார். இது அனைவருக்கும் தெரியும். நான் பிரதமரை கடுமையாக விமர்சித்து பேசுகிறேன். இது மிகவும் தைரியமான செயல் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் அந்த தைரியம் எப்படி வந்தது தெரியுமா? நான் ஊழல் செய்யவில்லை. எனவேதான் என்னால் தைரியமாக பேச முடிகிறது. என்னை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது என்ற எண்ணமே தைரியத்தை தருகிறது.

ஒருவேளை நான் ஊழல் செய்திருந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் என்னை மிரட்டுவார்கள். எனது நாற்காலி ஆட்டம் காணும். ஆனால் ஊழல் எதுவும் செய்யாததால் என்னால் துணிச்சலாக பேச முடிகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக தமிழக முதலமைச்சரால் அவ்வாறு பேச முடியாத நிலை உள்ளது. அவர் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு அடிபணிந்து செல்கிறார். முதலமைச்சரை மோடி கட்டுப்படுத்துகிறார் என்று சொல்வது எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனால் உண்மைநிலை அதுதான் என்று தெரிவித்தார்.

Related Stories: