மேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று ஏபிபி, சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகளே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட 5 மாநில மக்களின் மனநிலையை அறியும் வகையில் ஏபிபி மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பை நடத்தின. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்தும் என்றும்,  மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, 234 இடங்களில் 154 முதல் 162 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.  ஆளும் அதிமுக - பாஜ கூட்டணிக்கு வெறும் 58-66 தொகுதிகள் மட்டுமே  கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தமட்டில் 15 சதவீத வாக்குகளை இழக்கும். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றதை விட 60 இடங்களை திமுக கூட்டணி அதிகமாக பெறும். வாக்கு சதவீதமும் 2 சதவீதம் உயரும். கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணி 39.4 வாக்கு சதவீதம் பெற்றது. இம்முறை இது 41.4 சதவீதமாக அதிகரிக்கும். அதிமுக தலமையிலான கூட்டணி 28.6 சதவீத வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் பாஜ கடும் போட்டியை மீறி, மம்தாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றியை வசப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தமுள்ள 294 இடங்களில் 148 முதல் 164  வரையிலான இடங்களை அக்கட்சி கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஆட்சி அமைக்க 147 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும். எனவே, ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டாலும் கூவ, மீண்டும் மம்தா தலைமையிலேயே ஆட்சி அமையும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் 154-162 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.

திரிணாமுல் கட்சி இம்முறை 2.1 சதவீத வாக்கு சரியும். மற்றபடி பாஜ 38 சதவீத வாக்குப் பங்கைப் பெற்று 92-108 இடங்களைப் கைப்பற்றும். இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணி 31-39 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2016 தேர்தலில் திரிணாமுல் 211 இடங்களிலும், காங்கிரஸ் 44, கம்யூனிஸ்ட் 26 தொகுதிகளிலும், பாஜ 3 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) கடந்த 2016ம் ஆண்டுவெற்றியை போன்று இந்த முறை மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 83-91 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி 47-55 இடங்களிலும், பாஜ 0-2 தொகுதிகளிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் எல்டிஎப் 91, யுடிஎப் 47, பாஜ 1 மற்றும் சுயேச்சை 1 இடங்களில் வென்றன. மொத்தம் 125 தொகுதிகளை கொண்ட அசாமில், ஆளும் பாஜ முதல்வர் சர்பானந்தா சோனோவால், 68-76 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்பார். காங்கிரஸ் கூட்டணி 43-51 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் இங்கு, அதிமுக - பாஜ கூட்டணி 17-21 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* ராகுல்காந்தி பிரதமராக தமிழகம்,கேரளா ஆதரவு

பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? மோடியா? ராகுல் காந்தியா?’ என்ற கேள்வி ஐஏஎன்ஸ்-சி வோட்டர் சார்பில் கேட்கப்பட்டது. அதற்கு, கேரளாவில் 57.92 சதவீதம் பேரும், தமிழகத்தில் 43.46 சதவீதம் பேரும் ராகுல்காந்தி பிரதமராக தேர்வு செய்ய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மோடிக்கு 36.19 சதவீதம் பேரும், தமிழகத்தில் 28.16 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் மோடிக்கு 54.13 சதவீதமும், அசாமில் 47.8 சதவீதமும், புதுச்சேரியில் 45.54 சதவீதமும் ஆதரவு உள்ளது. ஆனால் ராகுலுக்கு மேற்குவங்கத்தில் 22.93 சதவீதமும், புதுச்சேரியில் 12.72 சதவீதமும், அசாமில் 22.93 சதவீதமும் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மத்திய அரசு திட்டத்துக்கு 6% ஆதரவு

மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் 6.24 சதவீத மக்கள் மட்டுமே திருப்தியடைந்துள்ளனர். 22.71 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்தனர். 50.53 சதவீத மக்கள் திருப்தியடையவில்லை. அசாமில், சுமார் 41.94 சதவீத மக்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். சுமார் 26.72 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 45.62 சதவீத மக்கள் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர். 23.49 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர். கேரளாவில், 28.67 சதவீத மக்கள் மிகுந்த திருப்தியும், 29.63 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியும் அடைந்துள்ளனர். புதுச்சேரியில், சுமார் 22.46 சதவீதம் பேர் மிகுந்த திருப்தியும், 23.7 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர்.

* வாழ்க்கை தரம் மிக மோசம்

கடந்த ஓராண்டில் தங்களது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? என்ற கேள்விக்கு மேற்குவங்கத்தில் 26.86 சதவீதம் பேர் உயர்ந்துள்ளதாகவும், 31.21 சதவீதம் பேர் அப்படியே இருப்பதாகவும், 41.39 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 0.54 சதவீதம் பேர் பதில் கூற விரும்பவில்லை என்றும் கூறினர்.

*  கேரளாவில், 21.76 சதவீத மக்கள் தங்களது வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்றும், 35.45 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும், 42.72 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 0.08 பேர் கருத்து கூறவில்லை என்றும் கூறினர்.

* அசாமில் 19.26 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாகவும், 23.54 சதவீதம் பேர் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், 48.58 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 8.62 சதவீதம் பேர் பதில் கூற விரும்பில்லை என்றும் கூறினர்.

* தமிழகத்தில் 11.85 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், 30.29 சதவீதம் பேர் எந்த மாற்றமும் இல்லை என்றும், 52.54 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும், 5.32 சதவீதம் பேர் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறினர்.

* புதுச்சேரியில் 20.88 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாகவும், 29.25 சதவீதம் பேர் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், 49.05 சதவீதம் பேர் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Related Stories:

>