தமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் தேவையற்ற இடங்களில் மேம்பாலம் அமைப்பதால் பல ஆயிரம் கோடி நிதி வீணடிக்கப்படுவதாகவும், கமிஷனுக்காகவே இதுபோன்ற பாலம் கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 66,039 கி.மீ நீள சாலைகள் உள்ளன. வாகன பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்துவது, புதிதாக பாலம் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன போக்குவரத்தின் எண்ணிக்கையை கணக்கிடாமல் தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் சாலையை அகலப்படுத்துவது, புதிதாக சாலை அமைத்தல் மற்றும் தேவையே இல்லாத இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக தான் உள்ளது. 30 சதவீத வாகனங்கள் கூட பயன்படுத்தாத சாலையில் கூட மேம்பாலம் அமைத்து அரசின் நிதி பல ஆயிரம்கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமான பிரிவு மூலம் கோவை காந்திபுரம் அருகே இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் அடுக்கு ரூ.120 கோடியும், இரண்டாவது அடுக்கு ரூ.75 கோடி என மொத்தம் ரூ.195 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முதல் அடுக்கு மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லக்கூட இல்லை. அதே போன்று மதுரை காளவாசலில் 750 மீட்டர் நீளத்தில் ரூ.54 கோடியில் நான்குவழி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் டிராபிக்கே இல்லை. பெரும்பாலான வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் தான் செல்கிறது.

இந்த நிலையில், கடந்த 2019ல் கரும்புக்கடையில் இருந்து உக்கடம் வரை ரூ.60 கோடியில் 600 மீட்டர் வரை மேம்பாலத்தை நீட்டிப்பதற்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்த திட்டத்துக்கு மட்டும் ரூ.265 கோடி ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் டவுன் பன்னீர் செல்வம் பூங்கா அருகே 1 கி.மீட்டர் வரை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் அதிகமான வாகனங்கள் பயன்படுத்துவதில்லை. மேம்பாலத்தின் கீழ் தான் வாகனங்கள் செல்கிறது. இதனால் இங்கு மேம்பாலம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது.

கோவையில் அவிநாசி சாலையில் உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடியில் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்நிலை மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் ஏர்போர்ட் செல்பவர்களின் வசதிக்காக இந்த பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலம் புதுவிதமான தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு ரூ.1069 கோடி ஒதுக்கீடு என்ற நிலையில் ரூ.1157 கோடி என திட்டமதிப்பீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ₹88 கோடி தற்போது கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த பாலம் முழுக்க, முழுக்க விமான நிலையம் செல்வபர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஒரு சாரர் மட்டுமே பயன்படுத்தும் விமான நிலையத்துக்கு பெரிய அளவில் மேம்பாலம் என்பது தேவையில்லாத ஒன்று.

சென்னையில் வடபழனி சிக்னல் ரூ.74 கோடி மதிப்பிலான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த மேம்பாலத்தில் பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தவில்லை. 10 சதவீத வாகனங்கள் தான் செல்கிறது. எனவே, எல்லா வாகனங்களும் சாலைகளின் கீழே தான் செல்கிறது. இதன் மூலம் வடபழனி மேம்பாலம் அமைத்தது வீண் என்பது தெரிகிறது. நெடுஞ்சாலைத்துறையில் தேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் திருமழிசை முதல் ஊத்துக்கோட்டை வரை கடந்த 2017-18ல் ரூ.31 கோடியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.16 கோடி தான் தற்போது வரை செலவிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பெரிய அளவில் டிராபிக் கிடையாது. அதே போன்று மகுடஞ்சாவடி முதல் குமாரபாளையம் சாலையில் கடந்த 2017ல் ரூ.45 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. தற்போது வரை ரூ.33 கோடி வரை இந்த பாலத்துக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் என்ற ஒன்றே கிடையாது. ஆனால், அங்கு மேம்பாலம் தேவையில்லாமல் அமைக்கப்படுகிறது. இதே போன்று மாநிலங்கள் முழுவதும் மேம்பாலங்கள் பல இடங்களில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் பாலங்களில் கூட கட்டுமான பணிகள் தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் கூட பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ.82.66 கோடியில் 1.53 கி.மீ நீளத்திற்கு புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம்   பல்லவாரம் பஸ் நிலையம்முன்பு தொடங்கி விமான நிலையம் அருகே சென்றடைகிறது. இந்த பாலம் தாம்பரத்தில் இருந்து கிண்டி வருபவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தில் 66 இடங்களில் ஜாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாயிண்டில் போகும் போது, வாகனங்கள் தூக்கி எறிவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேம்பாலம் சமதளமாக இல்லாமல் மேடு, பள்ளமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மேம்பாலம் திறக்கப்பட்டவுடனேயே மீண்டும் மூடப்பட்டு, மேம்பாலத்தில் தற்காலிக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகே மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த மேம்பாலத்தில் டிசைன் சரியாக போடாததன் விளைவு மற்றும் கட்டுமானத்தில் உள்ள குளறுபடியால் மேம்பாலத்தில் இப்பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.

அதே போன்று ஊரக சாலைகளில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் தரமற்றதாகவே உள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம் பேயாடிக்கோட்டையில் ரூ.6 கோடியில் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2018 ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், அக்டோபரில் பாலத்திற்கான அணுகு சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. அதே போன்று ஆற்றுப்பாலத்தின் தாங்குச்சுவர் அறித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 11 அதிகாரிகள் மீது மெமோ வழங்கப்பட்டன. தொடர்ந்து இது தொடர்பாக நடந்த விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி முடித்து வைக்கப்பட்டது.

தஞ்சாவூரில் சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலம் ரூ.52 கோடியில் கட்டப்பட்டது. 869 மீட்டர் நீளத்தில் 14 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் போடப்பட்ட தார் சாலைகளில் சில அடி தூரம் விரிசல் ஏற்பட்டது. மேலும், பாலத்தில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் சேதமடைந்தது. இதனால்,அந்த பாலத்தை பயன்படுத்தவே பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பொறியாளர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டன. ஆனால், 4 ஆண்டுகளான நிலையில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதே போன்று பொன்னேரி அருகே ரூ.13 கோடியிலம் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும் போது அணுகு சாலை அறித்து போய் விட்டது. இந்த விவகரத்தில் 3 பேர் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை விசாரணை நடைபெறவில்லை. காஞ்சிபுரம் முதல் பொன்னேரிக்கரை ஏரி வரை ரூ.52 கோடியில் ரயில்வே மேம்பாலம் கடடும் போது அணுகு சாலை சேதம் அடைந்தது. ஆனால், இது தொடர்பாக 4 பேர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தேவையில்லாத இடங்களில் மேம்பாலம் அமைத்தது மட்டுமின்றி, மேம்பாலங்கள் அமைத்ததிலும் தரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே போன்று கடந்த 10 ஆண்டுகளில் பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2011-12 ஆண்டில் இருந்து இதுவரையில் இந்த அரசு ரூ.34,014 கோடி செலவில் 43,688.67 கி.மீ நீள சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் பணிகளுக்கும், 10,643 கிமீ நீள சாலைகளின் ஓடுதள பாதை தரத்தினை மேம்படுத்துதல் பணிகளுக்கும் 3,768 பாலங்கள் மற்றும் ஏனைய கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7964 கி.மீ நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21 வரை 3,063 கி.மீ நீளத்தில் 1430 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளுக்கான பணிகள் ரூ.2503 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாவது கட்டம் ரூ.5171 கோடியிலும், மேலும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுவிடன் ரூ.6448 கோடியிலும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமையின் நிதியுதவியின் கீழ் சென்னை சுற்றுச்சாலை திட்டம் ரூ.12301 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த அளவுக்கு சாலைகள் அகலப்படுத்துவது, புதிதாக சாலை அமைப்பதும் மேம்பாலம் அமைக்கப்படும் நிலையில், வாகனங்களின் பயன்பாட்டை கணக்கில் கொண்டு, அவைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் வடபழனி சிக்னல் ரூ.74 கோடி மதிப்பிலான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மேம்பாலத்தில் பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தவில்லை. 10 சதவீத வாகனங்கள் தான் செல்கிறது. எனவே, எல்லா வாகனங்களும் சாலைகளின் கீழே தான் செல்கிறது. இதன் மூலம் வடபழனி மேம்பாலம் அமைத்தது வீண் என்பது தெரிகிறது.

* காற்றில் பறந்த விதிமுறைகள்

ஊரக சாலைகளில் வாகனங்கள் குறைவாக செல்லும் என்பதால் 1.75 மீ அகலத்தில் சாலை அமைத்தால் போதும். அதே போன்ற, மாவட்ட இதர சலைகள் 3.75 மீ, மாவட்ட முக்கிய சாலை 5.80 மீட்டர், நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே அமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகளின் அடிப்படையில் சாலை அமைக்கப்படுகிறது. குறிப்பாக, ஊரகசாலைகளுக்க குறைவான 1.75 மீட்டர் அமைத்தால்போதும். ஒரு சாலை அமைக்க ரூ.17 லட்சம் நிதிபோதுமானது.ஆனால், இந்த சாலைகளில் அதிகமாக வாகனங்கள் செல்வதாக கணக்கு காட்டி கடினமான புருவ சாலைகளாக அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சாலை அமைப்பதிலேயே பல ஆயிரம் கோடி வீண் செலவு செய்து இருப்பதாகவும் சமூக ஆர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>