தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை

சென்னை:  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம் கட்டமாக நேற்று 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தடைந்தனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 10ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். இங்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், வருமான வரி துறை உயர் அதிகாரிகள், அனைத்துக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் பதற்றமான வாக்குச்சாவடிகள், பண நடவடிக்கையை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்தன. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்களை முதல்கட்டமாக அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கடந்த 25ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 92 துணை ராணுவ வீரர்கள் பெங்களூரு, அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினம் இரவு 12.05 மணியளவில் 978 துணை வீரர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>