தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கட்சிகளின் போஸ்டர்கள் கிழிப்பு சுவர் விளம்பரங்கள் அழிப்பு: கார்களில் கொடிகளை அகற்றாமல் உலா வரும் பிரமுகர்கள்

நாகர்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் அரசு அலுவலகங்கள், அரசு வாகனங்களில் இருந்த முதல்வர் படம் அகற்றப்பட்டது. குமரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் முதல்வர் படம் வைக்கப்பட்டு இருந்தன. சில அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களும் இருந்தன. இவை அனைத்தும் அகற்றப்பட்டது. நேற்று நடத்தப்பட இருந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமும் ரத்து செய்யப்பட்டது.

நேற்று காலை முதல் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு மற்றும் போஸ்டர்கள் கிழிப்பு நடவடிக்கைகள் தொடங்கின. மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், நாகர்கோவிலில் நேற்று கோட்டார், வடசேரி, செட்டிக்குளம் பகுதிகளில் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.

 இனி அரசியல் கட்சிகள் சார்பில் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் செய்தால் செலவு கணக்கில் வரவு வைக்கப்படும்.  அரசு சுவர்கள், மின்கம்பங்களில் நோட்டீஸ் ஒட்டுதல், கொடி கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னரும் ஆளுங்கட்சியை சேர்ந்த பலர் தங்களது கார்களில் இன்னும் கட்சி கொடிகளை அகற்றவில்லை. கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரும், தனது காரில் கட்சி கொடியை கட்டி இருந்தார். அவரை அங்கிருந்த அதிகாரிகள் யாரும் விசாரிக்கவோ, எச்சரிக்கை செய்யவோ இல்லை. இனி வரும் நாட்களில் இவை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>