போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது நாளாக  நேற்று  அரசு பஸ் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 80 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி, நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில், தொமுச, சிஐடியு உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பலரும், விடுப்பு என்ற பெயரில் மறைமுகமாக போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பொதட்டூர்பேட்டை ஆகிய அரசு பஸ் டெப்போக்களிலிருந்து, தினமும் 224 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில், 10 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.

இதேபோல், மாதவரம், பாடியநல்லூர், எண்ணூர், அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, அய்யப்பன்தாங்கல், திருவொற்றியூர் ஆகிய டெப்போக்களில் இருந்து 951 மாநகர பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. இதில், சில பஸ்கள் மட்டும் அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து இயக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டன. பூந்தமல்லி: பூந்தமல்லி பணிமனை முன்பு தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளுர் மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளுர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ், பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ரவிக்குமார் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Related Stories: