ஜோலார்பேட்டை பார்சம்பேட்டையில் இருளில் மூழ்கிய ரயில்வே மேம்பாலம்: மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை நகராட்சி பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பார்சம்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தினகரன் செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் கடந்தாண்டு துவங்கி நிறைவடைந்தது.

இதையடுத்து, பார்சம்பேட்டை ரயில்வே மேம்பால சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.சி. வீரமணி, கலெக்டர் சிவன் அருள், எஸ்பி விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்தனர். ஆனால், அந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில மின் விளக்குகள் எரியாமல் மேம்பால சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் அந்தப்பகுதி டாஸ்மாக் கடை அருகில் உள்ளதால் மதுப் பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மேம்பால சாலையில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இரவு நேரங்களில் மேம்பால சாலையில் மின்விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: