பயிர்க்கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடு: வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்த விவசாயிகள்

திண்டுக்கல்: பயிர்க்கடன் தள்ளுபடியில் பிறரது பட்டா, சிட்டாவை வைத்து மோசடி நடப்பதை வீடியோ ஆதாரத்துடன் விவசாயிகள் நிரூபித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 3 ஒன்றியங்களின் அதிகபட்சமாக பாகாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 கோடியே 1 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கு விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்க மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த 18 பேருக்கு கடன் வழங்கப்பட்டதாக தெரிய வந்ததும் அப்பகுதியினர் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது 20 பேருக்கு நகைக்கடன் தருவதாக கூறிய நிர்வாகிகள் வங்கியில் வரவு வைக்கப்படும் பணத்தை ஜூலை மாதம் வரை எடுக்கக்கூடாது என எழுதி வாங்கியுள்ளனர். இந்த வகையில் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டி கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் செயலாளர் திரு முருகேசனிடம் வாக்குவாதம் செய்த போது அவர் தவறை ஒப்புக்கொண்டார். இதை விவசாயிகள் வீடியோவில் பதிவு செய்தனர். பாகாநத்தம் கூட்டுறவு சங்கத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதனிடையே தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க் கடன்களை ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்கு தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடியாக ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாக்கியுள்ள ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பயிர் கடன் தள்ளுபடிக்காக ரூ.5 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கினால், அனைத்து விவசாயிகளுக்கான பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி ஆகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் முழுமையான விளக்கம் இல்லாததால் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: