காவிரி திட்டப்பணிக்கான விதிகளில் திருத்தம் ரூ.3 ஆயிரம் கோடி டெண்டரில் ஊழல்: அனைத்து விவரங்களும் மூடி மறைப்பு; வரம்பு தொகை தளர்வு; திமுக எம்எல்ஏ புகார்

சென்னை: காவிரி படுகையில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிக்கான டெண்டர் முறைகேடாக விடப்பட்டுள்ளதாக கூறி திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் நேற்று புகார் அளித்தார். தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை செய்துள்ள ஊழல்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன், அதிமுக அரசின் ஊழல் குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் நேற்று புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் பகுதியில் பொதுப்பணித்துறையின் சார்பில் கடந்த ஆண்டு வெளியிட்ட என்ஐடி 13/2020 டெண்டரில் 31.1.2021 தேதியிட்ட அரசாணை எண் 32 மூலம் பல்வேறு விதிகளில் அதிகாரிகள் திருத்தம் செய்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை. டெண்டர் விடும்போது, குறிப்பிட்ட தொகையை அதிகாரிகள்தான் நிர்ணயம் செய்வார்கள். டெண்டர் தொகை நிர்ணயம் செய்யும்போது எந்த ஊழலும் நடக்காமல் தடுக்க வேண்டியது, உயர்ந்த தொகையை நிர்ணயம் செய்வதுதான் அவர்களது பணி.

மேலும், பெரிய டெண்டர்களின் தொகையை நிர்ணயம் செய்ய பல உறுப்பினர்கள் கொண்ட ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்யும் குழு அமைத்து தான் முடிவு செய்ய வேண்டும். குழுவில் தலைமைப் பொறியாளர், நிதித்துறையின் கூடுதல் செயலாளர்  இருப்பார்கள். இந்த உறுப்பினர்கள் பொது நிதியை கையாளும்போது வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவார்கள். ஆனால், 31.1.2021ம் தேதியில் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் ஒரு அரசாணை வெளியிட்டு டெண்டருக்கான தொகைக்குரிய வரம்பை தளர்த்தியுள்ளார். அத்துடன் தலைமைப் பொறியாளரே ரூ.1 கோடிக்கும் மேலான தொகையை நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் அதிகாரம் வழங்கியுள்ளார்.

இதன் மூலம், பல உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிந்துரை இல்லாமலே, தலைமைப் பொறியாளர்களே பல ஆயிரம் கோடி மதிப்புள்ள டெண்டர்களை முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. இது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். இது தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பது, டெண்டரை வேண்டியவர்களுக்கு வழங்கும் செயல். இந்நிலையில், மேற்கண்ட அரசாணைக்கு பிறகு அதே பொதுப் பணித்துறை செயலாளர் 8.2.2021ம் தேதியில் மீண்டும் ஒரு அரசாணை வெளியிட்டு ரூ.3,159 கோடி மதிப்புள்ள டெண்டருக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் 9.2.2021ல், தஞ்சாவூர், கீழ்க் காவிரிப் படுகையின் கண்காணிப்பு பொறியாளர் ஒரு டெண்டர் அறிவிக்கை வெளியிட்டார். அதன் மதிப்பு ரூ.2,834 கோடி. நிர்வாக அனுமதிக்கு பிறகு 30 முதல் 45 நாட்களில் டெண்டர் தயாரிப்பு பணிகள் நடக்கும். ஆனால் இந்த டெண்டர் விஷயத்தில் இதுபோன்ற காலம் ஒதுக்காமல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே டெண்டர் பணிகளை செய்துள்ளனர். மேலும், இந்த டெண்டர்களில் பணியின் தன்மை, பணியின் மதிப்பு, முன்வைப்புத் தொகை, குறித்த எந்த விவரமும் குறிப்பிடவில்லை.

அத்துடன் இந்த டெண்டர்களை மற்ற யாரும் எடுக்காமல் இருப்பதற்காக மறைமுகவே செய்துள்ளனர். டெண்டர் அறிவிக்கை வெளியிடும் போதும் டெண்டர் ஆவணங்கள் வெளியிடவில்லை. டெண்டர் புல்லட்டிலும் வெளியிடவில்லை. இது டெண்டர் சட்டத்துக்கு விரோதமானது. அந்த விதிகளை மீறுவதாகவும் உள்ளது. யாருக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாக இந்த திட்டம் முழுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை தளர்த்தி அதிகாரத்தை தலைமைப் பொறியாளருக்கு வழங்கியுள்ளதன் மூலம் இந்த டெண்டரை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவதற்காகத்தான் என்று நன்றாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் விதிகளை மீறி பொது நிதியில் நஷ்டம் ஏற்படுத்த காரணமாக இருந்துள்ளனர். எனவே இதன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும். இந்த ஊழலில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி: காவிரி படுகையில் ரூ.3 ஆயரம் கோடி மதிப்பில் ஒரு டெண்டர் முறைகேடாக விடப்பட்டது தொடர்பாக ஒரு புகார் அளித்துள்ளேன். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இனிமேல் வாழ்நாளில் ஆட்சிக்கு வர மாட்டோம், இது போல் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்காது என்ற அச்சத்தில்,  அவசரம் அவசரமாக இதுவரை செய்யாத அளவுக்கு, திடீர் திடீரென டெண்டரை உருவாக்குகின்றனர். இதற்கிடையே அமைச்சர் பாண்டியராஜன், ‘சட்ட மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி பணிகளை நிறுத்திவிட்டு, இதுவரை மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரங்கராஜன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் வேறு ஒரு ரூ.10 ஆயிரம் கோடி பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவிக்கிறார். இந்த அதிகாரம் இவர்களுக்கு இல்லை.

இது பட்ஜெட்டில் கொண்டு வந்து மாற்ற வேண்டும். அடிப்படை ஜனநாயக மரபைக்கூட பின்பற்றாமல் எல்லாம் செய்கிறார்கள். நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், ரூ.37 ஆயிரம் கேடிக்கு திடீரென டெண்டர் விடுகிறார்கள் என்றால் இது முழுமையாக ஊழல் செய்வதற்குதான். இது குறித்து புகார் கொடுத்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் இதையும் நீதிமன்றத்தில் பதிவு செய்வோம். ஆட்சி மாறியதும் இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். திருடர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டெண்டர் அறிவிக்கை வெளியிடும் போதும் டெண்டர் ஆவணங்கள் வெளியிடவில்லை. டெண்டர் புல்லட்டிலும் வெளியிடவில்லை. இது டெண்டர் சட்டத்துக்கு விரோதமானது.

Related Stories:

>