லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் வசித்து வருபவர் குமார் (45). லாரி உரிமையாளர். நேற்றுமுன்தினம் அவரது லாரி ஒன்று அந்த பகுதியில் எம்சாண்ட் ஏற்றி சென்றுகொண்டிருந்தது. இதைபார்த்த நன்னிலம் தாசில்தார் லட்சுமிபிரபா(52), அவரது ஜீப் டிரைவர் லெனின்(37) இருவரும் சேர்ந்து லாரியில் அளவுக்கு அதிகமாக எடை இருப்பதாக கூறி அதன் சாவியை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. லாரியை விடுவிப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு குமார் தகவல் தெரிவித்தார்.

பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக தாசில்தார் லட்சுமிபிரபாவிடம் குமார் தெரிவித்ததுடன் பணத்தை திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து எடுத்து கொடுப்பதாகவும், அங்கு வருமாறும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லட்சுமிபிரபா மற்றும் அவரது டிரைவர் லெனின் இருவரும் தலைமை தபால் நிலையத்திற்கு நேற்று சென்றனர். அப்போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடமிருந்து வாங்கும்போது மறைந்திருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் சிவன் வடக்கு தெருவை சேர்ந்தவர் மலர்விழி (52). மயிலாடுதுறை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். பொறையார் பார்வதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது காலிமனைக்கு பெயர் மாற்றம் செய்ய தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனு மீது மேல் நடவடிக்கைக்காக மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்றது. இந்த மனுவை பரிசீலித்து பட்டா பெயர் மாற்றம் செய்து ஆர்டிஓ கொடுத்தார். ஆனால், பட்டாவை வழங்காமல் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரும்படி குமாரிடம் மலர்விழி கேட்டார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பொறையாறில் உள்ள மலர்விழி வீட்டுக்கு நேற்று காலை சென்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: